இந்திய வீரர் முகமது சிராஜ் தந்தை துரதிஷ்டவசமாக நேற்று இரவு உயிரிழந்துள்ளார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சிராஜ் தனது தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க போவதில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவரான சிராஜின் தந்தை தினமும் கிடைக்கும் 500 ரூபாயில் ஒரு பகுதியை தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கைக்காக பயன்படுத்தி ஊக்கம் அளித்து வந்துள்ளார். மிகவும் சிரமப்பட்டு முன்னேறி வந்திருக்கும் சிராஜ் ஒவ்வொரு முறை விருது பெரும் பொழுதும் தனது தந்தையை குறிப்பிடாமல் விட்டது இல்லை. அந்த அளவிற்கு மிகவும் தந்தையின் நெருக்கமான பிள்ளையாக சிராஜ் இருந்திருக்கிறார்.
ரஞ்சிக் கோப்பை 2016-17 ஆம் ஆண்டுக்கான சீசனில் 41 விக்கெட் எடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய சிராஜ், அதே ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் 2.6 கோடி ரூபாய்க்கு ஹைதராபாத் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். அதன்பிறகு பெங்களூர் அணிக்காக விளையாடினார்.
2020 ஐபிஎல் சீசன் துவக்கத்தில் சற்று தடுமாறிய சிராஜ், பின் பகுதியில் மிகவும் சிறப்பாக பந்து வீசி அசத்தினார். பவர்பிளே ஓவர்களில் இரண்டு முறை மெய்டன் செய்த முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமைக்கும் சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.
மேலும் இந்த ஆண்டு ஆஸ்திரேலிய தொடரில் டெஸ்ட் அணியில் இடம் பெற்றிருக்கிறார். கடந்த நவம்பர் 13-ஆம் தேதி ஆஸ்திரேலியா சென்ற சிராஜ் தனிமை படுத்துதலில் இருக்கிறார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தனது தந்தையின் இறுதிச்சடங்கிற்கு அவரால் வர இயலவில்லை.
தனது தந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து பேசிய சிராஜ் கூறுகையில், “அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் விராத் கோலி இருவரும் என்னிடம் இந்த விஷயத்தை கூறுவதற்கு முன்பாக மனதை திடப்படுத்திக் கொள்ள வலியுறுத்தினார். அதன்பிறகு தந்தை இறந்து விட்டதை அவர்கள் கூறுகையில் சற்று இடி விழுந்தது போல எனக்கு இருந்தது. இருப்பினும் எனது தந்தை இருந்திருந்தால் அவர் இந்திய அணிக்காக விளையாடி பெருமை சேர்க்க வலியுறுத்தி இருப்பார். அவரது இறுதிச்சடங்கு என்னால் செல்ல முடியவில்லை என்றாலும் அவரது கனவை நனவாக்கி வருகிறேன் என நினைக்கையில் பெருமிதமாக இருக்கிறது. அவரின் எண்ணம் போல வரும் காலங்களிலும் நான் நிச்சயம் திறம்பட செயல்படுவேன்.” என்றார்.
சிராஜ் தந்தை தனது 53 வயதில் நுரையீரல் சார்ந்த பிரச்சனை காரணமாக உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

