கரோனா வைரஸ் அச்சுறுத்தல்; இந்தியாவிற்கு வருமா தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி..?
இந்தியாவில் 30-க்கு மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட போதிலும் தென்ஆப்பிரிக்கா அணி திட்டமிட்டபடி இந்தியா வரும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்தது. ஆனால் ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கிலும், டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கிலும் இழந்து ‘ஒயிட் வாஷ்’ ஆனது.
இந்திய அணி அடுத்து தென்ஆப்பிரிக்காவுடன் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஆட்டம் வருகிற 12-ந் தேதி இமாச்சால பிரதேசம், தரம்சாலாவில் நடக்கிறது. 2-வது போட்டி லக்னோவில் 15-ந்தேதியும், 3-வது ஆட்டம் 18-ந்தேதி கொல்கத்தாவிலும் நடக்கிறது.
இதற்கிடையே கொரோனா வைரஸ் பீதி காரணமாக இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவில் 30 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. இதேபோல் தென் ஆப்பிரிக்காவில் ஒருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.
இதற்கிடையே தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி திட்டமிட்டபடி இந்தியா வரும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் அருண் துமல் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:-
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் தரம்சாலா, லக்னோ, கொல்கத்தா ஆகிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. இதனால் தென் ஆப்பிரிக்க அணி இந்தியா வருவதில் சிக்கல் இல்லை. திட்டமிட்டபடி அந்த அணி வரும். நாங்கள் இதுகுறித்த நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்” என்றார்.