ஜூலை 13ம் தேதி துவங்க இருந்த இந்தியா இலங்கை இடையேயான கிரிக்கெட் தொடர், ஜூலை 18ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
விராட் கோலி தலைமையிலான சீனியர் வீரர்கள் கொண்ட இந்திய அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதால், ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்கள் பலரை உள்ளடக்கிய 2ம் தர இந்திய அணி இலங்கைக்கு சென்றுள்ளது.
மொத்தம் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி ஜூலை 13ம் தேதி நடைபெற இருந்தது.
இந்தியா இங்கிலாந்து இடையேயான கிரிக்கெட் தொடர் துவங்க இன்னும் மூன்று தினங்களே இருந்த நிலையில், இங்கிலாந்து தொடரை முடித்துவிட்டு இலங்கை திரும்பிய இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது தான் தற்போது புதிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, அந்த அணியின் உதவி ஊழியர் (வீரர்களின் ஆட்டம் குறித்த புள்ளி விவரங்களை ஆய்வு செய்பவர்) ஜி.டி.நிரோஷன் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருப்பது நேற்று தெரியவந்தது. இதையடுத்து அவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இலங்கை அணி வீரர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. அவர்கள் ஓட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் இந்திய தொடருக்காக நேற்று கொரோனா தடுப்பு வளையத்துக்குள் (பயோ பபுள்) வர திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அவர்களது தனிமைப்படுத்துதலை மேலும் 2 நாட்கள் அதிகரித்து அதற்கு பிறகு மேலும் ஒரு முறை கொரோனா பரிசோதனை நடத்தி அந்த முடிவுக்கு தகுந்தபடி கொரோனா தடுப்பு வளையத்துக்குள் கொண்டு வரலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
இதனால் ஜூலை 13ம் தேதி நடைபெற இருந்த இரு அணிகள் இடையேயான முதல் போட்டி ஜூலை 18ம் தேதி தள்ளிவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது ஒருநாள் போட்டி ஜூலை 20ம் தேதியும், மூன்றாவது போட்டி 23ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.