நான் மீண்டும் எனது பழைய பார்மிற்கு திரும்பி விட்டதாக உணர்கிறேன் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி ஒருநாள் போட்டிகள், டி20 போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் என இரண்டு மாதகாலம் நடைபெறவிருக்கும் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த போட்டிகள் வருகிற நவம்பர் 27ஆம் தேதி துவங்குகிறது. இதற்காக வீரர்கள் தங்களது பயிற்சிகளை ஏற்கனவே துவங்கிவிட்டனர். இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான தொடர் குறித்தும், தனது தற்போதைய பேட்டிங் நிலைமை குறித்தும் மனம் திறந்து பேசியிருக்கிறார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்.
அவர் கூறுகையில் நான் பயிற்சி மேற்கொண்டு இருக்கும் பொழுது சக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் எனது பேட்டிங்கை பார்த்து பழைய நிலைக்கு திரும்பிவிட்டது என கூறினர். பழைய நிலையில் ஆடுவது போன்று இருப்பதாக கூறியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
என்னைப்பொறுத்தவரை, ஆசஸ் மற்றும் இந்திய அணிக்கு எதிரான தொடர் இரண்டையும் பெரிதாக கருதுகிறேன். இந்த தொடர்களில் வெளியே வந்து எனது முழு திறமையை வெளிப்படுத்துவது மிகவும் அவசியமானது. ஆஸ்திரேலியா வீரனாக அணிக்கு எனது பங்களிப்பை கொடுப்பது மிகவும் முக்கியம்.
பழைய பார்மிற்கு திரும்பியிருக்கிறேன். இந்தியாவுடன் மோதிப்பார்க்க தயாராக இருக்கிறேன்.” என்றார்.
அதேநேரம் மீண்டும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக வருவீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் கூறுகையில், “கடந்த இரண்டு வருடங்களாக டிம் பயின் மற்றும் ஆரோன் பின்ச் இருவரும் அணியை திறம்பட வழி நடத்தி வருகிறார்கள். தற்பொழுது எனது வேலை அணிக்காக ரன் குவிப்பது மட்டுமே.” என பதிலளித்தார்.