ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன்களுக்கு மரண பயத்தை காட்டக்கூடிய அளவிற்கு திறமையானவர் ரவிச்சந்திரன் அஸ்வின் என்று புகழாரம் சூட்டியுள்ளார் ரவி சாஸ்திரி.
நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் வருகிற பிப்ரவரி ஒன்பதாம் தேதி நாக்பூர் மைதானத்தில் துவங்குகிறது. இரு அணிகளும் இதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாக்பூர் மைதானத்தில் சுழல் பந்துவீச்சு நன்றாக எடுபடும். ஆகையால் ஆஸ்திரேலிய அணியினர் அதற்கென்று பிரத்தியேகமாக பயிற்சிகள் செய்துள்ளனர். குறிப்பாக அஸ்வின் போன்று அச்சுஅசலாக இளம் வீரரை வைத்து வலைப்பயிர்ச்சியில் பயிற்சி செய்திருக்கின்றனர்.

மூத்த இந்திய வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்கும் ஸ்பின்னர்களுக்கு எதிராக ஸ்வீப் பிரச்சினையாக இருந்து வந்தது. அவர்களும் முதல் டெஸ்டுக்கு முன் பயிற்சியில் அதிக அளவில் ஸ்வீப் ஷாட்கள் பயிற்சி செய்திருக்கின்றனர்.
இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரையும் விட ரவிச்சந்திரன் அஸ்வின் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார். அவருக்கு எந்தவித திட்டமும் நீங்கள் செய்யத் தேவையில்லை. அவரே பார்த்துக் கொள்வார் என்று நம்பிக்கையுடன் பேசியுள்ளார் ரவி சாஸ்திரி.

“ரவிச்சந்திரன் அஸ்வின் எப்படிப்பட்ட வீரர் என்றால் அவருக்கு என்று நீங்கள் எதுவும் திட்டம் வகுக்க தேவையில்லை. அவருக்கு அவரே பல திட்டங்களை வைத்திருப்பார். எந்த இடத்தில் தவறு நேர்கிறதோ, அதை அடுத்த பந்தில் சரி செய்து கொண்டு நேர்த்தியாக பேட்ஸ்மேனை திணறடிக்கக் கூடியவர். குறிப்பாக பேட்டிங்கிலும் அணியின் சூழல் அறிந்து பங்களிப்பை கொடுக்கக் கூடியவர்.
வெளிநாடு மைதானங்களில் இக்கட்டான கண்டிஷன்களில் தனது பவுலிங்கை அதற்கேற்றவாறு தகவமைத்துக்கொண்டு தாக்கம் ஏற்படுத்தக்கூடியவர் அஸ்வின். இந்திய மைதானங்களில் சொல்லவே தேவையில்லை. ஒவ்வொரு அணியும் இவரை எதிர்கொள்வதற்கு என்று தனி திட்டம் வைத்து பயிற்சி செய்துவரும்.
இந்த முறை டெஸ்ட் தொடரில் முன்னணி பேட்ஸ்மேன்களை விட இவர் எதிரணிக்கு மரண பயத்தை காட்டக்கூடியவராக இருப்பார். தொடரை கைப்பற்ற மிகமுக்கியமானவராகவும் இருப்பார்.” என்று கூறினார் ரவி சாஸ்திரி.
