இந்தியர்களால் நமக்கு பெரும் ஆபத்து; நியூசிலாந்து போலீஸ் கல கல
இந்தியா நியூசிலாந்து இடையேயான ஒருநாள் தொடர் குறித்து, நியூசிலாந்து போலீஸார் பதிவிட்ட ட்வீட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 ஒரு நாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நேப்பியரில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

நேற்று (ஜன.26) நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2-0 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் போட்டி நாளை (ஜன.28) மவுண்ட் மான்கனுயீ நகரில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்திய அணியால் மக்களுக்கு ஆபத்து என நியூசிலாந்து காவல்துறையினர் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து, கிழக்கு மாவட்ட காவல்துறையின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

“நமது நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பயங்கரமான குழு பற்றி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க காவல்துறை விரும்புகிறது. கடந்த வாரம் இந்தக் குழு, நேப்பியர் மற்றும் மான்கனுயீ ஆகிய இடங்களில் அப்பாவி நியூசிலாந்து மக்கள் மீது மோசமான தாக்குதலை நடத்தியது. கிரிக்கெட் பேட் அல்லது பந்தைப் போன்றவற்றை கையில் எடுத்தால் நீங்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்” என நகைச்சுவையாக கூறப்பட்டுள்ளது.
Very clever!!! pic.twitter.com/34e7dZieOw
— Scott Styris (@scottbstyris) January 26, 2019
இந்த பதிவுக்கு ஏராளமான கிரிக்கெட் ரசிகர்களும் தங்கள் பாணியில் கிண்டலாக பதிலளித்துள்ளனர். நியூசிலாந்து போலீஸாரின் இந்த பதிவு லைக்ஸ்களையும் குவித்து வருவது கூடுதல் தகவல்.