கொழும்பில் 132 ரன்கள் எடுத்தது சுழற்பந்து வீச்சுக்கு எதிரான சிறந்த ஆட்டங்களில் ஒன்று: ரகானே

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கொழும்பில் நடைபெற்றது. இதில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்த நிலையில், 4-வது விக்கெட்டுக்கு புஜாராவுடன் இணைந்து ரகானே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி 217 ரன்கள் குவித்தது. புஜாரா 133 ரன்களும், ரகானே 132 ரன்களும் குவித்தனர்.

ஆடுகளம் முதல் நாளில் இருந்தே சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. அதிக அளவில் பவுன்ஸ், டர்ன் இருந்தது. இதனால் இலங்கை அணி நான்கு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது.

இலங்கையின் சுழற்பந்து வீச்சை சமாளித்து 132 ரன்கள் எடுத்ததே, சுழற்பந்து வீச்சுக்கு எதிரான என்னுடைய சிறந்த ஆட்டம் என்று ரகானே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரகானே கூறுகையில் ‘‘சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தலைசிறந்த ஆட்டங்களில் இதுவும் ஒன்று. பந்தை சிறப்பாக எதிர்கொண்டு ரன்கள் சேர்க்க வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்தினேன். பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது, ஆடுகளம் எப்படி வேலை செய்கிறது, எப்படி பந்து பவுன்ஸ் ஆகிறது, எப்படி டர்ன் ஆகிறது, பேட்டிங் செய்வதற்கு உகந்ததா இருக்கிறதா, இல்லையா என்பதை தெரிந்து கொண்டேன்.

ஆகவே, இலங்கை பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தோம். போட்டி சென்று கொண்டிருக்கையில் பேட்டிங் செய்ய ஆடுகளம் மிகவும் கடினமாக இருந்தது. நானும் புஜாராவும் மெய்டன் ஓவர்கள் வீச முடியாத அளவிற்கு விளையாட வேண்டும் என்று பேசிக்கொண்டோம்.

கடந்த முறை காலே டெஸ்டில் விளையாடிய பிறகு, ஹெராத்திற்கு எதிராக புட்வொர்க்கை சரியாக பயன்படுத்துவது முக்கியத்துவம் வாய்ந்தது என்று முடிவு செய்தோம். பலவிதமான வெரைட்டியில் பவுன்சர் பந்துகள் இருந்தன. சில பந்துகள் பவுன்சராக வந்தன. சில பந்துகள் மிகவும் தாழ்வாக வந்தன.’’ என்றார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.