இந்தியா – இலங்கை இடையிலான முதல் ஒருநாள் போட்டி தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது. விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் திசாரா பெரேரா பீல்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி இந்தியாவின் தவான், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இலங்கையின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது. ரோகித் சர்மா 2 ரன்னிலும், தவான் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமலும், ஷ்ரேயாஸ் அய்யர் 9 ரன்னிலும், மணீஷ் பாண்டே 2 ரன்னிலும், ஹர்திக் பாண்டியா 10 ரன்னிலும், புவனேஸ்வர் குமார் 0 ரன்னிலும் ஆட்டமிழக்க இந்தியா 29 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்து திணறியது.
8-வது விக்கெட்டுக்கு டோனியுடன் குல்தீப் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. அணியின் ஸ்கோர் 70 ரன்னாக இருக்கும்போது குல்தீப் யாதவ் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். டோனியுடன் இணைந்து குல்தீப் யாதவ் 41 ரன்கள் சேர்த்தார். இது இந்தியாவிற்கு முக்கியமான ரன்னாக அமைந்தது.
அடுத்து வந்த பும்ராவை ஒருபக்கம் நிற்கவைத்து டோனி அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் 100 ரன்னை நெருங்கியது. இந்தியாவின் ஸ்கோர் 87 ரன்னாக இருக்கும்போது பும்ரா ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். அடுத்து சாஹல் களம் இறங்கினார்.
மறுமுனையில் விளையாடிய டோனி 78 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இந்தியா 36.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. 39-வது ஓவரை பெரேரா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை டோனி தூக்கியடித்தார்.
ஆனால் பந்து பீல்டர் கையில் தஞ்சம் புக இந்தியா 112 ரன்னில் ஆல்அவுட் ஆனது. டோனி 65 ரன்கள் சேர்த்தார். சாஹல் ரன்ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தார். இலங்கை அணி தரப்பில் லக்மல் 13 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டும், பிரதீப் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை பேட்டிங் செய்து வருகிறது.
https://twitter.com/PRINCE3758458/status/939799904251236353