நியூசிலாந்தை வீழ்த்த இதை செய்யலாம்; இந்திய அணிக்கு அட்வைஸ் கொடுக்கும் வாசிம் ஜாபர்
வெலிங்டன் டெஸ்ட் படுதோல்வியிலிருந்து மீண்டு வரவேண்டுமெனில் இந்திய அணி முதலில் பேட் செய்தாலும் இரண்டாவதாக பேட் செய்தாலும் 350-400 ரன்களை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் முன்னாள் இந்திய தொடக்க வீரரும் உள்நாட்டு கிரிக்கெட்டில் பெரிய வீரருமான வாசிம் ஜாஃபர்.
இது தொடர்பாக வாசிம் ஜாஃபர் கூறியதாவது:
விராட் கோலி சமீபமாக பார்மில் இல்லை, எனவே அவர் வலுவாக மீண்டு எழுவார் என்று நம்புகிறேன். புஜாராவும் ரன்களை குவிக்க வேண்டிய தேவை உள்ளது. முக்கியமாக தங்கள் தொடக்கங்களை சதமாக மாற்ற வேண்டியுள்ளது. இது நடக்கவில்லையெனில் 350-400 ரன்கள் அடிக்கவில்லையெனில் நமக்கு பிரச்சினைகளே தொடரும்.
2200-250 ரன்களுடன் டெஸ்ட் போட்டிகளை வெல்ல முடியாது, பிட்சில் நல்ல பவுலிங்குக்கு ஆதரவு இருந்தால்தான் 200-250 ரன்களை வெற்றியாக மாற்ற முடியும். முதலில் பேட் செய்தாலும் 2வதாக பேட் செய்தாலும் 400-450 ரன்கள் தேவை.
நியூஸி. பவுலர்கள் நம் அணியின் ரன் விகிதத்தைக் கட்டுப்படுத்தி நீண்ட நேரங்களுக்கு நம்மை நெருக்கடியில் வைக்கின்றனர். வெலிங்டன் டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸ் பவுலர்களுக்குச் சாதகமாக இருந்தது. பவுன்சர் உத்தியை அவர்கள் கடைபிடித்தனர், 2வது இன்னிங்சில் நிச்சயம் இந்திய அணி நன்றாக பேட் செய்திருக்க முடியும். இரண்டு இன்னிங்ஸ்களிலும் 200 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது நம்பர் 1 அணிக்கு அழகானதல்ல.
கிறைஸ்ட்சர்ச்சில் இந்திய அணி மீண்டெழும், கடந்த காலத்தில் இதனைச் செய்துள்ளனர். எப்போதெல்லாம் அழுத்தத்தில் பின்னடைவு காண்கின்றனரோ அப்போதெல்லாம் எழுச்சி பெற்றுள்ளனர், அதையேதான் 2வது டெஸ்ட்டிலும் நான் எதிர்பார்க்கிறேன்” என்றார்.