சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆன ரஷீத் கான் இந்திய குடியுரிமை வாங்க போகிறார் என்பதற்கு ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் தற்போது பதில் அளித்துள்ளார். மேலும், ஆப்கானிஸ்தான் அதிபரும் பதில் அளித்துள்ளார்.

19 வயதாகும் ரஷீத் கான் தனது சுழற்பந்து வீச்சால் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். மேலும், ஐபில் போட்டியில் பிளே ஆப் சுற்றில் கொல்கத்தாவிற்கு எதிரான ஆட்டத்தில் 10 பந்துகளில் 34 ரன்கள் விளாசினார். மேலும், பௌலிங்கில் 14 ரன்களுக்கு 3 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.
இதன்பிறகு, ரசிகர்கள் ட்விட்டரில் ரஷீத் கான் இந்திய குடியுரிமை பெறபோகிறார் என ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்து விட்டனர். இதற்கு ஆப்கானிஸ்தான் அதிபர் பதிலளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, எங்களது நாட்டை பெருமை படுத்தி இருக்கிறார் ரஷீத் கான். அவருக்கு இதை நிரூபிக்க இடம் கொடுத்த இந்திய நாட்டுக்கு நன்றி, நிச்சயம் அவர் இன்னும் சிறப்பாக செயல்படுவார். ரஷீத் கான் எங்களது சொத்து இதை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க இயலாது என தெரிவித்தார்.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் கூறியதாவது, தங்களது நாட்டை விரும்பும் ஒவ்வொருவரும், தனது நாட்டுக்காகவே ஆட விரும்புவார். இந்தியா எங்களது நண்பர்கள், அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எங்களுக்காக ஒரு மைதானத்தையே கொடுத்திருக்கிறார்கள் நிச்சயம் எங்களால் மறக்க இயலாது என தெரிவித்தார்.
மேலும் அவர், ஆப்கானிஸ்தான் ரஷீத் கானை உருவாக்கியது ரஷீத் கான் ஆப்கானிஸ்தானை உருவாக்கவில்லை. ஒருவருக்கு தனது நாடு தான் முதலில், மற்றவை எல்லாம் அடுத்து தான். நாடு தான் ஒருவரின் அடையாளம், யாரும் நாட்டை விட்டு செல்லமாட்டார்கள் என சிரித்தவாறு கூறினார்.
ரஷீத் கான் ஐபில் போட்டியில் சன் ரைசெஸ் ஹைதராபாத் அணிக்காக 17 போட்டிகள் ஆடி 21 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஜூன் 14ம் தேதி துவங்க இருக்கும் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் சிறப்பாக செயல்படும். ரஷீத் கான் நிச்சயம் தனது ஆதிக்கத்தை செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.