இந்த வீரரை எதற்காக அணியிலிருந்து தொடர்ந்து தள்ளி வைத்தீர்கள் என பிச்சியியிடம் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி இரண்டாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறி வந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பெற்றிருந்த அஸ்வின் இரண்டு முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

மூன்றாம் நாள் மதிய இடைவேளைக்கு முன்னரே தென் ஆப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி பேட்டிங் செய்ய வந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டீன் எல்கர், குயின்டன் டி காக் மற்றும் டு பிளசிஸ் ஆகியோர் நிலைத்து ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
இந்திய தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இவர் ஒரு வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் ஆடுகிறார். ஆறு மாதங்களாக காயம் காரணமாக வெளியில் இருந்தாலும், வெஸ்ட் இண்டீஸ் எதிரான தொடரில் இடம்பெற்றிருந்தார். ஆனால், இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்டில் இது இவரது 27வது 5 விக்கெட்டுகள் ஆகும். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 5வது முறையாக 5 விக்கெடுகளை வீழ்த்தியுள்ளார்.

அஸ்வின் டெஸ்ட் அணியில் இடம் பெறுவதன் முக்கியத்துவம் குறித்து ஏற்கனவே சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்த நிலையில், தற்போது முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், அஸ்வின் போன்ற சமயோஜித புத்தி கொண்ட ஒரு வீரர் எப்போதும் இந்திய அணியில் இருக்க வேண்டும். அவரை எதற்காக அணியில் இருந்து தள்ளி வைக்கிறார்கள் என புரியவில்லை. சில காலம் காயம் காரணமாக வெளியேறி இருக்கிறார். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தொடரில் இடம் பெற்றிருந்தார். அப்போது அவரை ஏன் விராட் கோலி ஆட வைக்க முன்வரவில்லை.
அஸ்வின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணியில் இடம் பெற்றிருந்தாலும், எந்த வித தயக்கமும் காட்டாமல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவி வருகிறார். இவரை போன்ற ஒரு வீரர் எப்போதும் அணியில் இருக்க வேண்டும் என்றார்.