ஆஸ்திரேலியாவில் தனது டாக்சியில் வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களிடம் பணம் வாங்க மறுத்துள்ளார் இந்திய டிரைவர். மகிழ்ச்சி அடைந்த வீரர்கள் அவரை இரவு உணவிற்கு அழைத்து நன்கு உபசரித்து திருப்பி அனுப்பியுள்ளனர் இந்த செய்தி சமூக வலைதளங்களில் வெளியாகி இந்திய ரசிகர்களை மிகவும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் அணி, தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்றது.
இதற்காக பாகிஸ்தான் வீரர்கள் பிரிஸ்பேன் ஓட்டலில் தங்கி இருந்தனர். அச்சமயம் இரவு டின்னருக்கு இந்திய உணவகம் செல்ல விரும்பிய ஷகீன் அப்ரிதி, யாஷிர் ஷா, நஷீம் ஷா ஆகிய மூவரும் டாக்சியை அழைத்தனர்.
அப்போது இந்தியாவைச் சேர்ந்த டாக்சி டிரைவர் ஒருவர் அழைத்துச் சென்று இவர்களை இந்திய உணவகம் அழைத்து சென்றுள்ளார். பாக். வீரர்களை இந்திய உணவகத்தில் இறக்கிவிட்டு, இதற்கான கட்டணத்தை, எவ்வளவோ வற்புறுத்திய போதும், வாங்க மறுத்தார் இந்திய டிரைவர்.
உடனே பாகிஸ்தான் வீரர்கள், தங்களுடன் சாப்பிட வருமாறு டிரைவரை அழைத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். இவர்களுடன் காரில் பயணம் செய்த, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தில் வானொலி தொகுப்பாளர் அலிசன் மிட்சல், மறுநாள் கிரிக்கெட் வர்ணனையின் போது, வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஜான்சனிடம் இதனை தெரிவித்தார்.
இந்த செய்தியை அறிந்த இந்திய ரசிகர்கள் பலர் பாகிஸ்தானின் இளம் வீரர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்ததோடு, தங்களது அன்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
இரு நாட்டு ராணுவங்கள் இடையே ஏற்பட்டுள்ள பிளவு, விளையாட்டு வீரர்களுக்கு இடையே நிச்சயம் இல்லை என்பதற்கான சான்று இது எனவும் கூறப்பட்டு வருகிறது.