வியாழனன்று கொல்கத்தாவில் முதல் டெஸ்ட் போட்டியுடன் தொடங்கும் தொடரில் ஒரு டெஸ்ட் போட்டியைக்கூட வெல்வதற்கான வாய்ப்பு இலங்கை அணிக்கு மிகமிகக் குறைவு என்று ஸ்பின் லெஜண்ட் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் இணையதளம் ஒன்றில் முரளிதரன் கூறியதாவது:
இந்தியாவில் டெஸ்ட் போட்டி ஒன்றில் வெல்வதற்கான எங்களது வாய்ப்பு மிகக் குறைவு. இந்தியாவில் அனைத்து அணிகளுமே திணறியுள்ளன.
கடந்த 13 ஆண்டுகளில் 2 அணிகள் மட்டுமே இந்தியாவில் தொடரை வென்றுள்ளன. இந்திய அணி தற்போது நம்பர் 1 அணியாக தரவரிசயில் உள்ளது.

இலங்கையின் டெஸ்ட் கிரிக்கெட் பரவாயில்லை, ஆனால் குறைந்த ஓவர் போட்டிகளில் கடுமையாகத் திணறி வருகிறோம். இது கடினமான தொடர் எங்கள் வீரர்களின் திறமைக்கு கடும் சவால் காத்திருக்கிறது
நான் இந்தியாவுக்கு எதிராக ஆடிய போது இந்திய அணியில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மென்கள் ஆடினார்கள். இப்போதை விட அப்போது இந்திய அணி பேட்டிங் வலுவாக இருந்தது. சேவாக், கம்பீர், சச்சின், திராவிட், கங்குலி, லஷ்மண், தோனி ஒன்றிலிருந்து 7 வரை நல்ல பேட்டிங் வரிசை. இதில் பலர் அனைத்து கால சிறந்த வீரர்கள் இதனால் கஷ்டப்பட்டோம்.

உள்நாட்டில் நாங்களுமே வலுவான அணிதான், இந்திய அணி வலுவான அணியாக இருந்த போதிலும் 22 ஆண்டுகளாக இலங்கையில் தொடரை வெல்ல முடியவில்லை. இந்திய அணிக்கு ஆட்டத்தை கடினமாக்கிய தருணங்களின் மகிழ்ச்சியான நினைவுகள் எங்களிடத்தில் இன்னமும் உள்ளன. சில தொடர்களில் அனைத்துப் போட்டிகளும் டிராவில் முடிந்துள்ளன. 1997-ல் 2 டெஸ்ட்களை இலங்கையிலும் 3 டெஸ்ட் போட்டிகளை இந்தியாவிலும் ஆடினோம், அனைத்துமே டிரா ஆனது. இரு அணிகளிலுமே தரமான பேட்ஸ்மென்கள் இருந்தனர்.
இவ்வாறு கூறினார் முத்தையா முரளிதரன்.
இந்தியா vs இலங்கை தொடர்:

இந்தியா – இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடர் வரும் 16ம் தேதி கோல்கத்தாவில் துவங்குகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை வென்றால், கேப்டனாக அதிகப் போட்டிகளில் வெற்றி என்ற பட்டியலில் சவுரவ் கங்குலியை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு கேப்டன் விராட் கோஹ்லிக்கு கிடைத்துள்ளது.
மூன்று டெஸ்ட்கள், மூன்று ஒருதினப் போட்டிகள், மூன்று டி-20 போட்டிகளில் விளையாட, இலங்கை கிரிக்கெட் அணி வந்துள்ளது. இதில் டெஸ்ட் போட்டித் தொடர், வரும் 16ம் தேதி கோல்கத்தாவில் துவங்குகிறது. நவ. 24ம் தேதி நாக்பூரில் இரண்டாவது டெஸ்ட் போட்டியும், டிச. 2ல் டில்லியில் மூன்றாவது டெஸ்ட் போட்டியும் நடக்க உள்ளது.