நாளை டெல்லி மைதானத்தில் நடைபெறும் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ரோகித் சர்மா ஆடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்த சிக்கல் வந்துள்ளது.
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 3 டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் என மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவிருக்கிறது. முதல் கட்டமாக 3 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற இருக்கிறது.
அதில் முதல் போட்டி டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நாளை (நவம்பர் 3ம் தேதி) துவங்குகிறது. இதற்காக வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இத்தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், பொறுப்பு கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

வங்கதேச அணியின் இடதுகை பந்து வீச்சாளரான முஸ்தபிசுர் ரகுமானின் பந்துவீச்சை இந்திய வீரர்கள் எதிர்கொள்ள, இலங்கை அணியில் இருந்து இடதுகை பந்து வீச்சாளரான நுவான் இந்தியாவிற்கு வரவழைத்து வலைப்பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று பயிற்சியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஈடுபட்டிருந்தபோது, நுவான் பிரதீப் வீசிய பந்து ரோகித் சர்மாவின் இடது தொடையை பலமாக தாக்கியது. இதனால் சிறிது நேரம் அதே இடத்தில் அமர்ந்தார் ரோகித் சர்மா.

பின்னர், மருத்துவர்களால் உடனடியாக அழைத்து செல்லப்பட்டார். ரோகித் சர்மாவின் காயத்தை பரிசோதித்த மருத்துவர்கள், காயம் சற்று ஆழமாக இருப்பதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.
அதேபோல் நாளைய போட்டியில் அவர் ஆடுவாரா? இல்லையா? என்பது குறித்து நாளை காலை ரோகித் சர்மா எழுந்த பிறகு காயத்தை பரிசோதித்த பின் தெரிவிக்கப்படும் எனவும் மருத்துவ குழு தெரிவித்துள்ளது.
மிக முக்கிய துவக்க வீரராக திகழ்ந்து வரும் ரோகித் சர்மா தற்போது காயப்பட்டு உள்ளதால், இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டு விடுமோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது