நாடு திரும்புகிறார் வெளிநாட்டு வீரர்; சென்னை அணிக்கு பின்னடைவு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான மார்க் வுட் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக நாடு திரும்ப உள்ளார்.
ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தொடரின் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் இந்த தொடரில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு அணியும் அடுத்த சுற்றான ப்ளே ஆஃப் சுற்றிற்கு தகுதி பெறுவதற்காக கடுமையாக போராடி வருகின்றனர்.

இந்தநிலையில் இந்த தொடரில் தொடர்ந்து வெற்றிகளை குவித்து புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான மார்க் வுட் கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்பதற்காக ஐ.பி.எல் தொடர் நிறைவடைவதற்கு முன்னதாக நாடு திரும்ப திட்டமிட்டுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியை சேர்ந்தவரான இவரை இந்த முறை தனது அணியில் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த தொடரின் முதல் போட்டியிலேயே அவருக்கு வாய்ப்பு வழங்கியது, ஆனால் மார்க் வுட் முதல் போட்டியிலேயே ரன்களை வாரி வழங்கியதால் அடுத்தடுத்த போட்டிகளில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் தான் கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்பதற்காக விரைவில் நாடு திரும்ப திட்டமிட்டுள்ளதாக மார்க் வுட்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/TheCricketPaper/status/993841854964748289
இது குறித்து மார்க் வுட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் “பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடருக்கு பயிற்சி எடுக்கும் விதமாகவே இந்த முடிவை எடுத்துள்ளேன். இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்பதற்காக விரைவில் நாடு திரும்ப உள்ளேன். சென்னை அணியில் எனக்கு கிடைத்த அங்கீகாரத்திற்கு நான் எப்பொழுதும் கடைமைப்பட்டுள்ளேன், அடுத்த தொடரில் மீண்டும் சென்னை அணியின் ஜெர்சியை அணிவேன் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.