ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்று (ஏப்ரல் 26) நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
ஹைதராபாத் அணி இதுவரை தான் விளையாடிய 6 போட்டிகளில் 4 வெற்றியையும், 2 தோல்வியையும் பெற்றுள்ளது. தொடர்ந்து 2 தோல்வியை பெற்ற அந்த அணி மும்பை உடனான போட்டியில் தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் வெற்றி பெற்றது. தனது வெற்றியை தக்கவைத்துக்கொள்ள பஞ்சாப் அணியுடான போட்டியில் போராடும் என எதிர்பார்க்கலாம்.
பஞ்சாப் அணி இதுவரை தான் விளையாடிய 6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே தோல்வியடைந்துள்ளது. பஞ்சாப் அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் வென்று, தன் வெற்றியின் எண்ணிக்கையை பஞ்சாப் அணி உயர்த்த முயலும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டி, பஞ்சாப் அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இது இந்த தொடரில் இந்த இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டியாகும். முன்னதாக நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. அந்த போட்டியில் பஞ்சாப் அணியின் க்றிஸ் கெயில் சதமடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் அணி தொடர் வெற்றிகளை பெற்று, தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. ஹைதராபாத் அணியின் செயல்பாடும் சிறப்பாகவே உள்ளது. இருப்பினும் ஹைதராபாத் அணியின் பலமாக பந்துவீச்சே உள்ளது. அந்த அணியின் பந்துவீச்சு பஞ்சாப் அணியின் துவக்க விக்கெட்டுகளை வீழ்த்தும்பட்சத்தில், பஞ்சாப் அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம். இருப்பினும் இரு அணிகளும் வெற்றிக்கு போராடும் என்பதில் சந்தேகம் இல்லை.
போட்டி நடைபெறும் இந்த மைதானத்தில், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டிகளில் ஹைதராபாத் அணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் ஹைதராபாத் அணியின் ஆதிக்கம் தொடரும் என எதிர்பார்க்கலாம்.