அடுத்த வருட இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான கேப்டன் யார் என நேரலை நிகழ்ச்சியில் அறிவிக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்த நிகழ்ச்சி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றிலேயே கேப்டன் பெயரை நேரலை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறுவது இது தான் முதல் முறை ஆகும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் செயல்படுவார் என எதிர்பார்க்கபடுகிறது. 2015ஆம் ஆண்டில் அந்த அணிக்கு தடை விதிக்கும் முன்பு ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் தான் செயல்பட்டார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தடை செய்த பிறகு 2016ஆம் ஆண்டு நடந்த ஐபில் தொடரில் புனே அணிக்காக தோனி தலைமையில் விளையாடினார் ஸ்டீவ் ஸ்மித். ஆனால், 2017ஆம் ஆண்டு ஐபில் தொடரில் புனே அணியின் கேப்டன் ஆனார் ஸ்டீவ் ஸ்மித்.
“கேப்டன் தான் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். பல நாட்டில் இருந்து பல வீரர்கள் வருகிறார்கள். இதனால், அவர்களை பற்றி தெரிந்து கொண்டு, அதற்கு தகுந்தாற் போல் அணியை உருவாக்குவது மிகவும் கடினம். பென் ஸ்டோக்ஸ், அஜிங்க்யா ரஹானே, ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் கேப்டனாக சிறப்பாக செயல் படுவார்கள். கேப்டனாக செயல் படும் திறமை ஜோஸ் பட்லரிடமும் இருக்கிறது,” என ஷேன் வார்னே கூறினார்.
ஐபில் ஏலத்திற்கு முன்பு ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை மட்டும் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தக்கவைத்து கொண்டது. அதன் பிறகு ஐபில் ஏலத்தில் RTM கார்டு உபயோகித்து ரஹானே வாங்கியது ராஜஸ்தான்.
ஜனவரி மாதம் நடந்த ஐபில் ஏலத்தில் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், டார்சி ஷார்ட், ஜெயதேவ் உனட்கட் என நட்சத்திர வீரர்களை வாங்கி அணியை பல படுத்தியது ராஜஸ்தான் ராயல்ஸ். இந்த வருட ஐபில் தொடரின் முதல் போட்டியில் ஏப்ரல் 9ஆம் தேதி ஐதராபாத் அணியுடன் மோதுகிறது ராஜஸ்தான்.