பெங்களூர் அணியில் இணைந்தார் கேப்டன் விராட் கோஹ்லி
ஐ.பி.எல் 2018ம் ஆண்டு தொடருக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் பெங்களூர் அணி வீரர்களுடன் கேப்டன் கோஹ்லியும் இணைந்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி,20 தொடரான ஐ.பி.எல் தொடர் கோலகலமாக நடத்தப்பட்டு வருகிறது. இதன் 11வது சீசன் அடுத்த மாதம் 7ம் தேதி துவங்க உள்ளது.
இதில் முதல் தொடரில் இருந்தே பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்த தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் தனது இரண்டு வருட தடை காலம் முடிந்து மீண்டும் இந்த தொடரில் ரீ எண்ட்ரீ கொடுக்க உள்ளதால் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது, குறிப்பாக தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு தற்பொழுதே உருவாகிவிட்டது, சென்னை அணியின் பயிற்சியை பார்க்கவே சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்து வருகின்றனர்.
அதே போல் ஒவ்வொரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பெங்களூர் அணி வீரர்களும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில தினங்களாக தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்ட கேப்டன் கோஹ்லி, தற்போது பெங்களூர் அணியில் இணைந்துள்ளார்.
அடுத்த சில தினங்களுக்கு கோஹ்லியும் பயிற்சியில் ஈடுபட உள்ளார். கோஹ்லி அணியில் இணைந்திருப்பது பெங்களூர் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர்களுக்கு புதிய உத்வேகத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இதே போல் பெங்களூர் அணியின் மற்றொரு நட்சத்தி வீரரான ஏ.பி. டிவில்லியர்ஸ் ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடி வருவதால் அவரும் அடுத்த சில தினங்களுக்குள் பெங்களூர் அணியில் இணைய உள்ளார்.

பெங்களூர் அணி ஏப்ரல் 8ம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.
ஐ.பி.எல் 2018ம் ஆண்டு தொடருக்கான பெங்களூர் அணி;
விராட் கோஹ்லி, ஏ பி டிவில்லியர்ஸ், சர்பராஷ் கான், கிறிஸ் வோக்ஸ், சாஹல், உமேஷ் யாதவ், பிராண்டன் மெக்கல்லம், வாசிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, டி. காக், முகமது சிராஜ், கோரி ஆண்டர்ஸன், கோலின் டி கிராண்ட்த்ஹோம், அஸ்வின், பார்தீவ் பட்டேல், மொயீன் அலி, மந்தீப் சிங், மனன் வோஹ்ரா, பவன் நெகி, டிம் சவுத்தி, குல்வந்த், அன்கிட் சவுத்ரி, பவன் திஷ்பண்டே, அனிருதா ஜோசி.