2019 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சிறந்த கேப்டன் டெல்லி அணியின் கேப்டனாக இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் தான் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாட்ஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லி அணி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக ஆடி வருகிறது. இது வரை ஆடிய 13 போட்டிகளில் 8 வெற்றிகளை பெற்று 16 புள்ளிகளுடன் 7 ஆண்டுகளுக்கு பிறகு பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு டெல்லி அணிக்கு கேப்டன் பொறுப்பில் இருந்த கௌதம் கம்பீர், டெல்லி அணி தொடர் தோல்விகளை சந்தித்ததால், தான் கேப்டன் பொறுப்பிற்கு தகுதி அல்ல என தாமாகவே முன் வந்து விலகிக் கொண்டார்.
அதன் பிறகு 24 வயதான இளம் வீரர் ஸ்ரேயா ஐயருக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டது. கடந்த சீசனில் சற்று தடுமாறி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்தது டெல்லி அணி. ஆனால், 2019 ஆம் ஆண்டு அதாவது, இந்த சீசனில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் டெல்லி அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கேப்டன் பொறுப்பில் மட்டுமல்லாது சரியான நேரங்களில் பேட்டிங்கிலும் அசத்தி வருகிறார்.
இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சி குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாட்ஜ் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, “கடந்த பல சீசன்களாக டெல்லி அணி ஐபிஎல் தொடரில் இருக்கிறதா? இல்லையா? என்பதே தெரியாமல் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு இளம் வீரர்களை கொண்டு இந்த அளவிற்கு செயல்பட முடியும் என்பதை அந்த அணி எடுத்துக்காட்டியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் அணியின் கேப்டன் சக இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தான். இக்கட்டான சூழ்நிலைகளில் அவரின் கேப்டன்சி மிகவும் ஆச்சரியப்படுத்தும் விதமாக இருந்துள்ளது. மேலும், வீரர்களை முழுமையாக பயன்படுத்துவதோடு அவரும் சிறப்பாக செயல்படுகிறார் என்பது கூடுதல் சிறப்பு” என புகழாரம் சூட்டினார்.