முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஆடாமல் இருந்த ரபாடா, ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என தற்போது தெரியவந்துள்ளது.
இந்த வருடம் ஐபிஎல் தொடர் டெல்லி அணிக்கு மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த 11 சீசன்களாக டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயரில் களமிறங்கிய அந்த அணி, இந்த சீசனில் பெயர் மாற்றம் செய்து டெல்லி கேப்பிடல்ஸ் என களமிறங்கியது.

மேலும் ஓரிரு மாற்றங்களையும் அணியில் செய்துள்ளனர். கடந்த பல சீசன்களாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஆடி வந்த ஷிகர் தவான் இந்த ஆண்டு டெல்லி அணிக்காக எடுக்கப்பட்டார். துவக்க வீரராக தனது பங்கினை சிறப்பாக செய்து வருகிறார்.
அதேபோல், ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன் பொறுப்பிலும் மற்றும் பேட்டிங்கிலும் நல்ல முன்னேற்றம் இருந்து வருகிறது இதுவும் அணியின் வெற்றிக்கு உதவி இருக்கிறது. பந்துவீச்சில் தென்னாப்பிரிக்க இளம் வேகப்பந்துவீச்சாளர் காகிசோ ரபாடா டெல்லி அணிக்காக மிக முக்கிய பந்துவீச்சாளராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான சூப்பர் ஓவரில் சிறப்பாக பந்து வீசி அணியை வெற்றிப் பாதைக்கு திரும்பினார். மேலும் மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற அணிகளுக்கு எதிராக கடைசி கட்ட ஓவர்களில் சிறப்பாக வீசி ரன்களை கட்டுப்படுத்தி இருக்கிறார். இந்த சீசனில் ஆடிய 12 போட்டிகளில் 25 விக்கெட்டுகள் வீழ்த்தி விக்கெட் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.
சென்னை அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னர் பயிற்சியின்போது முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஆடவில்லை. அவருக்கு பதிலாக டிரென்ட் போல்ட் உள்ளே வந்தார். சென்னை அணி கடைசி 5 ஓவர்களில் மட்டும் 72 ரன்கள் அடித்தது. குறிப்பாக கடைசி ஓவரில் 21 ரன்கள் அடித்தது. இது டெல்லி அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
போட்டி முடிவின்போது ரபாடாவின் முக்கியத்துவத்தை உணர்ந்ததாக டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தனது பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இதன் காரணமாகவே சென்னை அணியை கட்டுப்படுத்த முடியாமல் 179 ரன்கள் வரை சென்றதாகவும், டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளித்தாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், ரபாடாவின் காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அடுத்த போட்டியில் அவர் ஆடுவார் என்பது சந்தேகம்தான். மேலும் ஐபிஎல் தொடரை விட்டு அவர் வெளியேறுவதற்கும் மிக அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் டெல்லி நிர்வாகம் தெரிவித்துள்ளது.