ஆண்ட்ரியூ ரசல் கொல்கத்தா அணிக்கு கிடைத்தது எப்படி..? உண்மையை உடைத்த கவுதம் கம்பீர்
ஆண்ட்ரியூ ரசலை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தேர்ந்தெடுத்து தனது அணியில் இணைத்து கொண்ட ரகசியத்தை அந்த அணியின் முன்னாள் கேப்டன் கவுதம் கம்பீர் தற்பொழுது வெளிப்படுத்தியுள்ளார்.
ஐபிஎல் 2019 சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் வார்னர், பேர்ஸ்டோவ் ரன்கள் குவித்து வரும் வரும் நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல்-ரவுண்டரான அந்த்ரே ரஸல் சிக்சர் மழை பொழிந்து வருகிறார்.
அவர் இதுவரை நான்கு போட்டிகளில் ஆடியுள்ளார். நான்கிலும் பேட்டிங் செய்ய களம் இறங்கி 77 பந்துகளில் 207 ரன்கள் அடித்துள்ளார். இதில் 22 சிக்சர்கள் அடங்கும். 12 பவுண்டரிகள் அடங்கும். இரண்டு முறை நாட்அவுட். அவரது சராசரி 103.5 ஆகும். ஸ்டிரைக் ரேட் 268.83 ஆகும். சிக்சர் மட்டும் பவுண்டரி மூலமாகவே 180 ரன்கள் குவித்துள்ளார்.

அவருக்கு அடித்தபடியாக அதே அணியின் நிதிஷ் ராணா 12 சிக்சர்கள் அடித்து 2-வது இடத்தில் உள்ளார். டி வில்லியர்ஸ் 11 சிக்சர்கள் அடித்து 3-வது இடத்தில் உள்ளார். கிறிஸ் கெய்ல், பேர்ஸ்டோவ், வார்னர் தலா 10 சிக்சர்கள் அடித்துள்ளனர்.
ஐதராபாத் அணிக்கெதிரான முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 44 பந்தில் 87 ரன்கள் தேவை என்ற நிலையில் களம் இறங்கினார். கடைசி மூன்று ஓவரில் 53 ரன்கள் தேவைப்பட்டது. சித்தார்த் கவுல் வீசிய 18-வது ஓவரில் இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரியும் அடித்தார். புவனேஸ்வர் குமார் வீசிய 19-வது ஓவரில் தலா இரண்டு சிக்சர், பண்டரிகள் விளாசினார். 19 பந்தில் தலா நான்கு பவுண்டரி, சிக்சர்களுடன் 49 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரது அதிரடியால் கொல்கத்தா வெற்றி பெற்றது.

ஆர்சிபி-க்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 205 ரன்னை சேஸிங் செய்தது. கேகேஆர் 15.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்திருக்கும்போது களம் இறங்கினார். கடைசி மூன்று ஓவரில் 53 ரன்கள் தேவைப்பட்டது.
18-வது ஓவரில் மூன்று சிக்சர்களும், 19-வது ஓவரில் நான்கு சிக்சர்களுடன் விளாசினார். 13 பந்தில் 7 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 48 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க 19.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் அடித்து கேகேஆர் வெற்றி பெற்றது.
இப்படி ஒவ்வொரு போட்டியிலும் ருத்ரதாண்டவம் ஆடி வரும் ஆண்ட்ரியூ ரசலை கொல்கத்தா அணி எப்படி தன்னுடன் இணைத்து கொண்டது என்ற ரகசியத்தை அந்த அணியின் முன்னாள் கேப்டனான கவுதம் கம்பீர் தற்பொழுது தெளிவுபடுத்தியுள்ளார்.
இது குறித்து கம்பீர் பேசியதாவது;
2013 அல்லது 2014ம் ஆண்டில் அப்பொழுது கொல்கத்தா அணிக்காக விளையாடிய ஜக் காலிஸிற்கு உறுதுணையாக மற்றொரு அதிரடி ஆட்டக்காரரை அணியில் எடுக்க கொல்கத்தா நிர்வாகம் முடிவு செய்தது. அப்பொழுது பெரிதும் அறியப்படாத ரசலை எடுக்குமாறு கொல்கத்தா நிர்வாகிகள் சிலர் வலியுறுத்தினர், அதனடிப்படையிலேயே கொல்கத்தா அணி அவரை தனது இணைத்து கொண்டது, இன்று அவரே கொல்கத்தா அணியின் மிகப்பெரிய பலமாக திகழ்ந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.