தான் ஒவ்வொரு போட்டியை விளையாடுவதும் கடினமான ஒன்றுதான் என பெங்களுர் அணி பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2019 தொடரின் 7வது போட்டி இன்று நடைபெறுகிறது இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களுரில் உள்ள சின்னசாமி மைதனாத்தில் இந்தப் போட்டி நடைபெறுவதால், சொந்த மண்ணில் பெங்களுருவை வெற்றி பெறுவது சற்று கடினம் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னையிடம் பெங்களூர் அணி 70 ரன்களில் சுருண்டு தோல்வி அடைந்ததால், இந்தப் போட்டியை கவனத்துடன் விளையாடவுள்ளனர். மும்பையும் முதல் போட்டியில் தோற்றுள்ளதால், இந்தப் போட்டியை வெற்றி பெற வேண்டும் என முனைப்புடன் உள்ளனர்.
இந்தப் போட்டி தொடர்பாக பேசிய டி வில்லியர்ஸ், “எனக்கு ஒவ்வொரு போட்டியை விளையாடுவதும் கடினமானது தான். நீங்கள் பலத்துடன் விளையாட விரும்புவீர்கள். பின்னர் நீங்கள் களைத்துவிடுவீர்கள். இங்கு யாரும் மிகச் சிறந்தவர்கள் அல்ல. பும்ரா ஒரு சிறப்பான பவுலர். ஆனால் அவரை இந்தப் போட்டில் சற்று நிறுத்தி வைத்து பந்துவீச அனுப்புவார்கள். ஏனென்றால் இந்த மைதனாத்தின் பவுண்டரிகள் பெரியவை அல்ல. இந்தச் சிறிய மைதானம் என்பதால் அனைத்து பவுலர்களும் இங்கு சற்று அழுத்தத்துடன் தான் விளையாடுவார்கள்” என்றார்.
188 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. தொடக்க ஆட்டக்காரர் மொயீன் அலி 13 ரன்னில் தேவையில்லாமல் ரன்-அவுட் ஆனார். அதைத் தொடர்ந்து பார்த்தீவ் பட்டேல் 31 ரன்னிலும், கேப்டன் விராட் கோலி 46 ரன்களிலும் (32 பந்து, 6 பவுண்டரி), ஹெட்மயர் 5 ரன்னிலும் வீழ்ந்தனர். இதில் கோலி ஒட்டுமொத்த ஐ.பி.எல். போட்டியில் 5 ஆயிரம் ரன்களை எட்டிய 2-வது வீரர் (முதலில் சுரேஷ் ரெய்னா) என்ற சாதனையுடன் வெளியேறினார்.
மறுமுனையில் டிவில்லியர்ஸ் போராடினார். அவர் ரன் கணக்கை தொடங்கும் முன்பே ஸ்லிப்பில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை யுவராஜ்சிங் கோட்டை விட்டார். அதை சாதகமாக பயன்படுத்தி சிக்சர் மழை பொழிந்த டிவில்லியர்ஸ் 31 பந்தில் அரைசதத்தை எட்டினார்.
கடைசி 2 ஓவர்களில் அந்த அணியின் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை வீசிய ஜஸ்பிரித் பும்ரா, கிரான்ட்ஹோமின் (2 ரன்) விக்கெட்டை கபளகரம் செய்ததுடன் அந்த ஓவரில் 5 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
இதையடுத்து கடைசி ஓவரில் பெங்களூரு அணிக்கு 17 ரன்கள் தேவையாக இருந்தது. பரபரப்பான 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா வீசினார். இதில் முதல் பந்தை எதிர்கொண்ட ஷிவம் துபே சிக்சர் அடித்தார். அடுத்த பந்தில் அவர் கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பித்து ஒரு ரன் எடுத்தார். எஞ்சிய 4 பந்தில் 3 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்த மலிங்கா தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.
பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் மும்பை அணி 6 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. டிவில்லியர்ஸ் 70 ரன்கள் (41 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தும் பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டது. மும்பை தரப்பில் பும்ரா 3 விக்கெட் வீழ்த்தினார். 2-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணிக்கு இது முதலாவது வெற்றியாகும். பெங்களூரு தொடர்ச்சியாக சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும்.