“உலககோப்பையில் இடம் பெறுவதற்காக கேஎல் ராகுல் கடந்த சில மாதங்களாக அவரது ஆட்டத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளார் என நினைக்கிறேன்” என்று உலக கோப்பையில் அணியில் இடம்பெற்ற கே எல் ராகுல் குறித்து இந்திய அணியின் முன்னாள் அதிரடி துவக்க வீரர் வீரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி கடந்த திங்கள்கிழமை பிசிசிஐ தெர்வுக்குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் அவரால் வெளியிடப்பட்டது. இதில் இடம் பெறுவது சந்தேகம் என எதிர்பார்க்கப்பட்ட கே எல் ராகுலுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

கே எல் ராகுல் உலக கோப்பை அணியில் இடம் பெற்றதற்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுவது, இந்த வருடம் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடியது தான். இதுவரை ஆடிய 10 போட்டிகளில் 399 ரன்கள் அடித்துள்ளார். அதில் மூன்று அரைசதம் மற்றும் ஒரு சதம் அடங்கும். கே எல் ராகுல் ஆட்டத்தில் குறிப்பாக கவனிக்கப்படவேண்டிய ஒன்று சராசரி. இவர் 57 ரன்கள் சராசரியாக கொண்டுள்ளார். மேலும், ஸ்ட்ரைக் ரேட் 128 ஆகும்.
இந்நிலையில், இந்த உலகக்கோப்பை அணி பல நேர்மறை மற்றும் எதிர்மறை விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. அதில் குறிப்பாக, இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட அம்பத்தி ராயுடு விற்கு இடம் அளிக்கப்படவில்லை. அதற்கு பதிலாக, மிகக் குறைந்த போட்டிகளில் ஆடிய விஜய் சங்கருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.

கே எல் ராகுல் உலக கோப்பை அணியில் இடம் பெற்றது குறித்து இந்திய அணியின் முன்னாள் அதிரடி துவக்க வீரர் வீரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.

சேவாக் கூறுகையில், “கடந்த சில மாதங்களாக உலக கோப்பை அணியில் இடம் பெறுவதை குறிவைத்து கேஎல் ராகுல் தனது ஆட்டத்தை முற்றிலுமாக மாற்றி ஆடி வருகிறார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டை போலவே அதிரடி காட்டாமல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக ரன்களை குவிக்க முடிவு செய்து அதற்கு ஏற்றார்போல் ஆடினார். இதனால், முதல் 6 7 போட்டிகளில் நன்கு ரன் குவிக்க முடிந்தது. இது தேர்வாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது” என்றார்.