சென்னையை வீழ்த்துமா ஹைதராபாத்..? ஹைதராபாத்தில் இன்று பலப்பரீட்சை
ஐ.பி.எல் டி.20 தொடரின் 12வது சீசன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
மொத்தம் 56 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை 32 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 33வது போட்டியான இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 7 போட்டிகளில் அசத்தல் வெற்றி பெற்றிருந்தாலும், சென்னை அணியில் ஏராளமான குறைகள் இருப்பதை நாம் கன்கூடாக பார்த்து வருகிறோம். பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் வாட்சன், அம்பத்தி ராயூடு போன்ற வீரர்கள் அடுத்தடுத்த போட்டிகளிலாவது சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே அது சென்னை அணிக்கு கை கொடுக்கும். இல்லையெனில் சென்னை அணி அடுத்தடுத்த போட்டிகளில் நிச்சயம் தடுமாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே வேளையில் ஹைதராபாத் அணி குறை எதுவும் சொல்ல முடியாத அளவிற்கு பந்துவீச்சு, பேட்டிங் மற்றும் பீல்டிங் என அனைத்திலும் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பேட்டிங்கில் டேவிட் வார்னர், பாரிஸ்டோவ் போன்ற வீரர்களும், பந்துவீச்சில் ரசீத் கான், புவனேஷ்வர் குமார் ஆகியோரும் மிகப்பெரிய பலமாக திகழ்ந்து வருகின்றனர்.
இன்றைய போட்டிக்கான இரு அணிகளிலும் மாற்றங்கள் எதுவும் இருக்க வாய்ப்புகள் இல்லை என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டிகளில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டியிலும் களம் காண்பார்கள் என தெரிகிறது.
சமபலம் கொண்ட இரு அணிகள் இன்றைய போட்டியில் களம் காண உள்ளதால் நிச்சயம் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் இரு அணிகள் இடையேயான முந்தைய போட்டி முடிவுகள், இரு அணிகளின் பலம், பலவீனங்கள் ஆகியவற்றை வைத்து பார்க்கும் பொழுது இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெறுவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன.