ராஜஸ்தான் அணிக்காக ஆடி வந்த 17 வயது இளம் வீரர் ரியான் பராக் ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஒரு கட்டத்தில் அந்த அணி அறுபது எழுபது ரன்களுக்குள்ளேயே சுருண்டு விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதை மாற்றியமைத்து அணியை 110 ரன்களுக்கும் மேல் எடுத்து செல்ல முடியுமென தனது அரை சதம் மூலம் நிரூபித்தார் 17 வயது இளம் வீரர் ரியான் பராக்.
இப்போட்டியின் இறுதியில் ராஜஸ்தான் அணி தோல்வியைத் தழுவி இருந்தாலும் தனி ஒருவனாக நின்று கடைசிவரை போராடிய ரியான் பராக் கிற்கு அனைத்து பக்கங்களில் இருந்தும் பாராட்டுக்கள் குவிகின்றன.
இவர் இந்தப் போட்டியில் மட்டுமல்ல இதற்கு முன்னர், கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தனி ஒருவராக ஆடி 47 ரன்கள் அடித்து அணிக்கு வெற்றியை உறுதி செய்தார். மும்பை அணிக்கு எதிரான போட்டியிலும் இவர் 43 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.
ரியான் பராக் சாதனை
ரியான் பராக் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான (53வது) போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் மிக குறைந்த வயதில் ( 17 வயது 175 நாட்கள்) அரை சதம் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார்.
இதற்கு முன்னதாக, ராஜஸ்தான் அணி வீரர் சஞ்சு சாம்சன் 18 வயது 169 நாட்களில் அடித்த அரைசதம் மிகக்குறைந்த வயதில் அடித்ததாக இருந்தது. அந்த சாதனையை பிரித்திவி ஷா அதே 18 வயது 169 நாட்களில் அடித்து சமன் செய்தார்.
ரிஷப் பண்ட் 18 வயது 212 நாட்களில் ஐபிஎல் தொடரில் அரைசதம் அடித்தார். அதேபோல், ஷுப்மன் கில் 18 வயது 237 நாட்களில் அரைசதம் அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.