சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள நிலையில், முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா சென்னை அணிக்கான தனது ஆலோசனையை ஓபனாக தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கிங்காக வலம் வந்த தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு தொடரில் மிக மோசமாக விளையாடி வருகிறது.
இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் வெறும் 3 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, புள்ளி பட்டியலிலும் கடைசி இடத்திலேயே உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான 90 சதவீத வாய்ப்புகள் ஏறகனவே பறிபோய்விட்ட நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.

இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடையும் பட்சத்தில், நடப்பு ஐபிஎல் தொடருக்கான ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறிய முதல் அணி என்ற பெயரை எடுக்கும் என்பதால், முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் சென்னை அணிக்கான தங்களது ஆலோசனைகளை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா சென்னை அணிக்கான தனது ஆலோசனையை ஓபனாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் பேசுகையில், “சிஎஸ்கே அணி பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்பு அந்த அணியின் கைகளில் மட்டுமல்ல. மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்தும் இருக்கிறது. ஆனாலும் கணித முறைப்படி, இன்னும் சிஎஸ்கேவிற்கான பிளே ஆஃப் வாய்ப்பு உயிர்ப்புடன் இருக்கிறது. ஆனால் வாழ்வா சாவா போட்டியில் மும்பை இந்தியன்ஸை சிஎஸ்கேவால் வீழ்த்த முடியுமா..?
சிஎஸ்கே அணி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்போகிறது என்றால், என்னுடைய தேர்வு கண்டிப்பாக ஜெகதீஷனாக இருப்பார். ஜெகதீஷன் தனக்கு கிடைத்த ஒரேயொரு வாய்ப்பில் அருமையாக பேட்டிங் ஆடினார். மேலும் கேதர் ஜாதவை நீக்கிவிட்டு கூடுதலாக ஒரு பவுலரை ஆடவைக்க வேண்டும். அணியில் வேறு எந்த மாற்றமும் செய்ய தேவை இல்லை” என்று தெரிவித்தார்.