கிரிஸ் கெய்லுக்கு இன்று இடம் கொடுக்காதது ஏன்..? அணில் கும்ப்ளே விளக்கம்
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கிரிஸ் கெய்லுக்கு இடம் கிடைக்காததற்கான காரணம் என்ன என்பதை பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளரான அனில் கும்ப்ளேவே விளக்கியுள்ளார்.
ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதி வருகின்றன.
தொடர் தோல்விகளால் துவண்டுபோயுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இன்றைய போட்டியிலாவது அதிரடி வீரர் கிரிஸ் கெய்லுக்கு வாய்ப்பு கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போடியிலும் கிரிஸ் கெய்லுக்கு இடம் கிடைக்கவில்லை. சிம்ரன் சிங் என்னும் வீரருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
பஞ்சாப் அணி இன்றும் கிரிஸ் கெய்லுக்கு இடம் கொடுக்காதது ஏன் என ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வரும் நிலையில், இதற்கான காரணம் என்ன என்பதை அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான அணில் கும்ப்ளேவே தெளிவுபடுத்தியுள்ளார்.
இது குறித்து அணில் கும்ப்ளே கூறுகையில், இன்றைய போட்டியில் கிரிஸ் கெய்லுக்கு இடம் கொடுக்கவே நாங்கள் திட்டமிட்டிருந்தோம், ஆனால் எதிர்பாராத விதமாக அவருக்கு இன்று உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. புட் பாய்சனால் கிரிஸ் கெய்ல் அவதிப்பட்டதன் காரணமாகவே இன்றைய போட்டியில் கிரிஸ் கெய்ல் விளையாடவில்லை” என்று தெரிவித்தார்.