மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்துள்ளது.
நடப்பு ஐபிஎல் டி.20 தொடரின் இறுதி போட்டியான இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதி வருகின்றன.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய டெல்லி அணிக்கு, அந்த அணியின் முதல் மூன்று வீரர்களான ஸ்டோய்னிஸ் (0), ஷிகர் தவான் (15), ரஹானே (2) ஆகியோர் வந்த வேகத்தில் டிரண்ட் பவுல்ட்டின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறினர்.
இதனால் 22 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி தடுமாறியது. இதனையடுத்து நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் – ஸ்ரேயஸ் ஐயர் கூட்டணி மும்பை அணியின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டு பொறுமையாக ரன் சேர்த்தது.

38 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்திருந்த போது ரிஷப் பண்ட் கவுட்டர் நைலின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினாலும் இறுதி வரை ஆட்டமிழக்காத ஸ்ரேயஸ் ஐயர் 50 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரியுடன் 65 ரன்கள் எடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்துள்ள டெல்லி அணி 156 ரன்கள் எடுத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் டிரண்ட் பவுல்ட் 3 விக்கெட்டுகளையும், கவுட்டர் நைல் 2 விக்கெட்டுகளையும், ஜெயந்த் யாதவ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.