சன் ரைசர்ஸ் ஹைதராபாத் – டெல்லி கேப்பிடல்ஸ் இடையேயான இன்றைய போட்டியில் வெற்றி பெற போகும் எது என்பது குறித்தான தனது கருத்தை முன்னாள் வீரர் கிருஷ்ணமசாரி ஸ்ரீகாந்த் ஓபனாக தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் டி.20 தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிபயர் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன.
கடந்த மாதம் துவங்கிய ஐபிஎல் டி.20 தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குவாலிபயர் போட்டியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்ற ஹைதராபாத் அணியும், குவாலிபயர் போட்டியில் தோல்வியடைந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிபயர் போட்டியில் மோத உள்ளன.

இன்றைய போட்டியில் வெற்றி பெற்று மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இறுதி போட்டியில் மல்லுக்கட்ட போகும் அணி எது என்பதை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் கால் பதிக்கும் அணி என்பது குறித்தான தங்களது கணிப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் இன்றைய போட்டி குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியே இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என ஆரூடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஸ்ரீகாந்த் பேசுகையில், “டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணியே இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என நம்புகிறேன். ஒரு அணியாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் வலுவாக உள்ளது. டெல்லி அணியின் பந்துவீச்சு பலமாக இருந்தாலும், ஹைதராபாத் அணி அதை விட அதிக பலம் கொண்ட அணியாக உள்ளது. நானாக இருந்தால் இன்றைய போட்டிக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் சிம்ரன் ஹெய்ட்மருக்கு இடம் கொடுப்பேன், சிம்ரன் ஹெய்ட்மார் டெல்லி அணியின் பேட்டிங் யூனிட்டை பலப்படுத்துவார்” என்றார்.