பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதி வருகின்றன.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணி கெத்தாக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருந்தாலும், அந்த அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. ரோஹித் சர்மா 9 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் ரன் எதுவும் எடுக்காமலும், இஷன் கிஷன் 7 ரன்களிலும் விக்கெட்டை இழந்து அடுத்தடுத்து வெளியேறினர்.

இதன்பின் கூட்டணி சேர்ந்த க்ரூணல் பாண்டியா – டிகாக் கூட்டணி மும்பை அணியை சரிவில் இருந்து மீட்டு நிதானமாக ரன் சேர்த்தது. க்ரூணல் பாண்டியா 34 ரன்களிலும், குவிண்டன் டிகாக் 53 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.
முக்கிய பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க தவறியதால் 17 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி வெறும் 120 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 150 ரன்களுக்குள் மட்டுமே எடுக்கும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி இரண்டு ஓவரில் ருத்ரதாண்டவம் ஆடிய கீரன் பொலார்டு வெறும் 12 பந்தில் 4 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரியுடன் 34 ரன்கள் எடுத்து மிரள வைத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 176 ரன்கள் எடுத்துள்ளது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில் முகமது ஷமி மற்றும் அர்ஸ்தீப் சிங் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.