ரத்து செய்யப்படுகிறது ஐ.பி.எல் டி.20 தொடர்..? அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தாண்டு ஐபிஎல் டி20 தொடர் நடைபெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
13-ஆவது ஐபிஎல் டி20 இந்தாண்டு மார்ச் 29-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்தது. இந்நிலையில் உலகெங்கிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 29 பேர் உயிரிழந்துள்ளனர். ஏற்கெனவே கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஏப்ரல் 14-ஆம் தேதி வரை நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்நிலையில் திட்டமிட்டப்டி ஏப்ரல் 15 ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி “இப்போதைக்கு தள்ளி வைக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. மேலும் ஐபிஎல் போட்டிகளை எப்போது நடத்துவது குறித்தும் கலந்தாலோசிக்கவில்லை. கடைசியாக மார்ச் 14 ஆம் தேதியன்று நடந்தக் கூட்டத்தில் ஐபிஎல் போட்டிகளை ஏப்ரல் 15 ஆம் தேதி வரை ஒத்திவைக்கலாம் என்ற முடிவை எடுத்தோம், அந்த முடிவில் இப்போது வரை உறுதியாக இருக்கிறோம்.
மேலும் நாட்டில் நிலவும் சூழல் குறித்தும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என கூறியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில் “ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் முடிவடைந்தாலும், வெளிநாட்டு வீரர்களின் விசா நடைமுறைகளையும் கவனத்தில்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆஸ்திரேலிய அரசு அந்நாட்டு குடிமக்களை அடுத்த 6 மாதக் காலம் வெளி நாடுகளுக்கு செல்ல தடை விதித்துள்ளது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதும் சந்தேகமாக இருக்கிறது. ஐபிஎல் தொடரில் மட்டும் 62 வெளிநாட்டு கிரிக்கெட் வீர்ரகள் விளையாட இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.