மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதி வருகின்றன.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூர் அணிக்கு ஆரோன் பின்ச்சும், தேவ்தட் படிக்கல்லும் துவக்க வீரர்களாக களமிறங்கினார்.
போட்டியின் முதல் ஓவரில் இருந்தே அதிரடியாக விளையாடிய ஆரோன் பின்ச் 35 ரன்களில் விக்கெட்டை இழந்தார். நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாடிய மற்றொரு துவக்க வீரர் தேவ்தட் படிக்கல் 40 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். விராட் கோஹ்லி வழக்கம் போல லெக் ஸ்பின்னர் ராகுல் சாஹர் பந்துவீச்சில் 3 ரன்கள் எடுத்திருந்த போது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
இதன் பின் கடைசி நான்கு ஓவர்களில் கூட்டணி சேர்ந்த டிவில்லியர்ஸ் – ஷிவம் துபே கூட்டணி மும்பை இந்தியன்ஸின் பந்துவீச்சை பாரபட்சம் பார்க்கமால் சிக்ஸர்களாக பறக்கவிட்டு மளமளவென ரன் குவித்தது.
அதிரடியாக விளையாடிய டிவில்லியர்ஸ் 24 பந்துகளில் 54 ரன்களும், கடைசி ஒவரில் மூன்று இமாலய சிக்ஸர்கள் பறக்கவிட்ட ஷிவம் துபே10 பந்தில் 27 ரன்களும் எடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் வெறும் 3 விக்கெட்டுகளை இழந்துள்ள பெங்களூர் அணி 201 ரன்கள் குவித்துள்ளது.