கே.எல் ராகுல் அடித்த ரன்னை கூட அடிக்க முடியாமல் அசிங்கப்பட்ட பெங்களூர் அணி; பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி
பெங்களூர் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர் மற்றும் கேப்டனான கே.எல் ராகுல் 69 பந்துகளில் 7 சிக்ஸர் மற்றும் 14 பவுண்டரிகளுடன் 132* ரன்கள் எடுத்ததன் மூலம் நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் வெறும் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்த பஞ்சாப் அணி 206 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய பெங்களூர் அணிக்கு மிகப்பெரும் அதிர்ச்சியாக அந்த அணியின் முதல் மூன்று முக்கிய வீரர்களான படிக்கல் (1), ஜாஸ் பிலிப் (0) மற்றும் விராட் கோஹ்லி (1) ஆகியோர் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறினர். இதனால் 4 ரன்கள் எடுப்பதற்குள் பெங்களூர் அணி 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
துவக்க வீரரான ஆரோன் பின்ச் 20 ரன்களும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிவில்லியர்ஸ் 28 ரன்களும், ஆல் ரவுண்டர் வாசிங்டன் சுந்தர் 30 ரன்களும் எடுத்து கொடுத்து பெங்களூர் அணியின் மானம் காத்ததன் மூலம் 17 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பெங்களூர் அணி 109 ரன்கள் மட்டுமே எடுத்து 97 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது.
பெங்களூர் அணியில் ஆரோன் பின்ச் (20), டிவில்லியர்ஸ் (28), சுந்தர் (30) மற்றும் சிவம் துபே (12) ஆகியோரை தவிர மற்ற எந்த வீரரும் 10 ரன்களை கூட தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில் அதிகபட்சமாக ரவி பிசோனி மற்றும் முருகன் அஸ்வின் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஷெல்டன் கார்டல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.