முக்கிய வீரருக்கே இடம் இல்லை; இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இது தான்
இன்று மாலை துவங்கும் ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளன.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் ஐ.பி.எல் தொடரின் 12 சீசன்கள் இதுவரை நிறைவடைந்துள்ள நிலையில், 13வது சீசன் இன்று துவங்குகிறது.
துபாயில் நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டியான இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோத உள்ளது.
இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு இந்த போட்டி துவங்க இருக்கும் நிலையில், இந்த போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.
சேன் வாட்சன் ;
கடந்த தொடர்களை போலவே இந்த தொடரிலும் சேன் வாட்சனே சென்னை அணிக்கு துவக்கம் கொடுக்க உள்ளார். இந்த தொடருடன் சேன் வாட்சன் ஐ.பி.எல் தொடரில் இருந்தும் ஓய்வை அறிவித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கடந்த தொடர்களை விட இந்த தொடரில் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
டூ பிளசிஸ்;
சேன் வாட்சனோடு இணைந்து தென் ஆப்ரிக்கா அணியின் முன்னாள் கேப்டனான டூபிளசிஸ் சென்னை அணிக்கு துவக்கம் கொடுப்பார். டூபிளசிஸ் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் அது நிச்சயம் சென்னை அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும்.
அம்பத்தி ராயூடு;
சுரேஷ் ரெய்னா விலகியுள்ளதால் அவரது இடத்தில் அம்பத்தி ராயூடு களமிறக்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. முரளி விஜய்க்கு இடம் கிடைக்கும் என சேன் வாட்சன் போன்ற பலர் கூறியிருந்தாலும் இன்றைய போட்டியில் அம்பத்தி ராயூடுவே மூன்றாவது இடத்தில் களமிறக்கப்பட வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளன.
தோனி,
கேப்டனான தோனி நான்காவது இடத்தில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ஓய்வை அறிவித்த தல தோனி இந்த தொடரின் மூலம் தன் மீதான ஒட்டுமொத்த விமர்ச்சனத்திற்கும் பதில் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
கேதர் ஜாதவ்;
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான கேதர் ஜாதவ் இந்த தொடரிலாவது சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே சென்னை ரசிகர்களின் விருப்பமாகவும், வேண்டுகோளாகவும் உள்ளது.
ரவீந்திர ஜடேஜா;
பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் மாஸ் காட்டக்கூடிய ரவீந்திர ஜடேஜா இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதகெலும்பாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டூவைன் பிராவோ;
ஆல் ரவுண்டரான டூவைன் பிராவோ, பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டால் அது சென்னை அணிக்கு நிச்சயம் பலன் உள்ளதாக இருக்கும்.
இம்ரான் தாஹிர்;
சீனியர் சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிர் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே அது அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும்.
தீபக் சாஹர்;
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து யூனிட்டிற்கு தலைமையே இவர் தான் என்று சொல்லும் அளவிற்கு சென்னை அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வரும் தீபக் சாஹர், இந்த தொடரிலும் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு.
பியுஸ் சாவ்லா;
ஹர்பஜன் சிங் விலகியதால் அவரது இடத்தில் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான பியூஸ் சாவ்லா களமிறக்கப்பட வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது. மிட்செல் சாட்னருக்கு அடுத்தடுத்த போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கலாம் என தெரிகிறது.
ஷர்துல் தாகூர்;
வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர், இந்த தொடரிலாவது சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.