தான் அதிக விக்கெட் வீழ்த்துவதை விட டெல்லி அணியின் வெற்றி தான் முக்கியமானது என டெல்லி அணியின் நட்சத்திர வீரரான ரபாடா பெருந்தன்மையுடன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் டி.20 தொடர் இன்றுடன் நிறைவு பெற உள்ளது. இன்று மாலை நடைபெறும் இறுதி போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.

இன்றைய போட்டியில் வெற்றி பெற்று, எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் மத்தியிலும் நிலவி வரும் நிலையில், இறுதி போட்டி குறித்து பேசிய டெல்லி வீரர் ரபாடா தான் அதிக விக்கெட் கைப்பற்றுவதை விட டெல்லி அணியின் வெற்றி தான் தனக்கு முக்கியம் என பெருந்தன்மையுடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரபாடா கூறுகையில், “ஐதராபாத் அணிக்கெதிராக குறிப்பாக கடைசி ஓவரை சிறப்பாக வீசுவேன் என்று நினைக்கவில்லை. சிறப்பாக பந்து வீசும்போது இதுபோன்று அமையும். இதற்காக அவார்டை எதிர்பார்க்கக் கூடாது. நான் இப்படித்தான் எடுத்துக் கொள்வேன். தொடரை வெல்ல வேண்டும் என்பதுதான் முக்கியம். மற்றதெல்லாம் 2-வதுதான்.

நாங்கள் தொடரை கைப்பற்றினால், நான் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை என்றாலும் கவலைப்பட மாட்டேன். மிக நீண்ட தொடரில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது கடினம். நாங்கள் முக்கியமான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. இறுதிப் போட்டியில் சிறப்பாக அல்லது சிறந்த முறையில் விளையாடுவோம்’’ என்றார்.