சாத்து சாத்துனு சாத்திய சஞ்சு சாம்சன்; சென்னை அணிக்கு இமாலய இலக்கு
சென்னை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்துள்ளது.
ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதி வருகின்றன.
ஷார்ஜாவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 6 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார்.

ஜெய்ஸ்வால் விக்கெட்டை இழந்ததும் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் – ஸ்டீவ் ஸ்மித் கூட்டணி சென்னை வீரர்களின் பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்து அசுர வேகத்தில் ரன் குவித்தது. அதிலும் குறிப்பாக ரன் ஓடி எடுப்பது எல்லாம் எனக்கு தெரியாது என்பது போல் வெறும் சிக்ஸர்களாக விளாசிய சஞ்சு சாம்சன் பாரபட்சம் பார்க்காமல் அனைத்து பந்துவீச்சாளர்களின் பந்தையும் பிரித்து மேய்ந்தார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் வெறும் 32 பந்துகளில் 9 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரியுடன் 74 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார். மற்றொரு துவக்க வீரரான ஸ்டீவ் ஸ்மித் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாடி 47 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார்.

சஞ்சு சாம்சன் விக்கெட்டை இழந்த பிறகு வந்த வீரர்கள் மிக சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினாலும் கடைசி நேரத்தில் களமிறங்கிய பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் போட்டியின் கடைசி ஓவரில் தொடர்ந்து நான்கு சிக்ஸர்கள் அடித்து மிரள வைத்தார்.
நிகிடியின் பந்துவீச்சை பதம் பார்த்த ஆர்ச்சர் 8 பந்துகளில் 4 சிக்ஸருடன் 27 ரன்கள் எடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 216 ரன்கள் எடுத்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக சாம் கர்ரான் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.