நடப்பு ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் சுற்றில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியுள்ள நிலையில், தோனியின் மனைவி சாக்ஷி உருக்கமான கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார்.
ஒவ்வொரு வருட ஐபிஎல் தொடரிலும் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பமனமாக திகழ்ந்து வந்த தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருட தொடரில் மிக மோசமாக விளையாடி வருகிறது.
இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் வெறும் 4 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 8 போட்டிகளில் மிக மோசமான தோல்வியை சந்தித்தது. புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இழந்துள்ளது.

விளையாடிய அனைத்து வருடமும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஒரே அணி என்ற பெருமையை பெற்றிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ், இந்த வருடம் முதல் அணியாக வெளியேறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடர் தோல்விகள் குறித்தும், சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியது குறித்தும் ரசிகக்ரள், கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் தங்களது வேதனைகளை வெளிப்படுத்தி வரும் நிலையில், சென்னை அணியின் கேப்டனான தோனியின் மனைவியும் உருக்கமான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ‘இது வெறும் விளையாட்டு … சில போட்டிகளில் வெற்றி பெறலாம், சில போட்டிகளில் தோல்வி அடையலாம், யாரும் தோல்வி அடைய விரும்புவதில்லை, ஆனால் எல்லோரும் வெற்றியாளர்களாக இருக்க முடியாது. உண்மையான வீரர்கள் போராட பிறக்கிறார்கள். அவர்கள் எப்போதும் நம் இதயத்திலும் நம் மனதிலும் சூப்பர் கிங்ஸ்-களாக இருப்பார்கள் என உணர்வுப்பூர்வமாக’ கூறியிருக்கிறார்.

சாக்ஷியின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தனது ட்விட்டர் பக்கத்தில் சாக்ஷியின் உருக்கமான பதிவை சேர் செய்துள்ளது.