பென் ஸ்டோக்ஸ் வருவாரா இல்லையா..? சேன் வார்னே அதிரடி அறிவிப்பு
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நம்பிக்கை நாயகனான பென் ஸ்டோக்ஸ் இந்த தொடரில் விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் சேன் வார்னே புதிய அப்டேட் கொடுத்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது. பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஜோஃப்ரா ஆர்ச்சர் போன்ற வீரர்களும் பேட்டிங்கில் பட்லர், ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களும் தொடர்ந்து மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டு போட்டிகளில் அசத்தல் வெற்றி பெற்றது.
கடந்த தொடர்களை விட இந்த தொடரில் போதிய பலம் கொண்ட அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வலம் வந்தாலும், பென் ஸ்டோக்ஸ் இன்னமும் அணியில் இணையாதது ஒரு குறையாகவே பார்க்கப்பட்டு வருகிறது.
பென் ஸ்டோக்ஸ் இந்த தொடரில் விளையாடுவாரா இல்லையா..? வந்தால் எப்போது வருவார்..? என்பது குறித்து தினம் தினம் விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது இது குறித்து சேன் வார்னேவே அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.
பென் ஸ்டோக்ஸ் அணிக்கு எப்போது திரும்புவார் என்பது குறித்து வார்னே கூறுகையில் ‘‘எப்படியும் இந்த வருட ஐபிஎல் தொடரில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் மிகப்பெரிய இழப்பு. எங்களுடைய நினைப்பு அவருடன் இருக்கிறது. பென் ஸ்டோன்ஸ் அணியில் இருந்து மிகவும் வலுவான அணியாக தோன்றும்’’ என்றார்.
மேலும், ‘‘ஸ்டீவ் ஸ்மித் தொடக்க வீரராக களம் இறங்குவது எனக்கு பிடித்திருக்கிறது. சிறந்த வீரர்களுக்கு அதிகமாக பந்துகள் சந்திக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நம்புகிறவன் நான். என்னை பொறுத்த வரைக்கும் பட்லர், ஸ்மித், சஞ்சு சாம்சன் முதல் மூன்று இடங்களில் களம் இறங்குவது சரியானதே’’ என்றார்.