சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான விஜய் சங்கர் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார்.
ஐபிஎல் டி.20 தொடரின் 13வது சீசன் துபாயில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 58 போட்டிகள் கொண்ட இந்த தொடர் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
லீக் சுற்று அடுத்த சில தினங்களில் நிறைவடைய உள்ளதால், ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்காக ஒவ்வொரு அணியும் கடுமையாக போராடி வருகின்றன.

மும்பை இந்தியன்ஸ் அணி மட்டும் ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளதால், அடுத்த மூன்று இடங்களுக்கு பெங்களூர், டெல்லி, பஞ்சாப் , ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை முற்றிலுமாக இழந்துவிட்டது.
இதில் 12 போட்டிகளில் விளையாடி அதில் 5 போட்டியில் வெற்றியும், 7 போட்டியில் தோல்வியும் அடைந்து 10 புள்ளிகளுடன் 7வது இடத்தில் இருக்கும் டேவிட் வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணி, எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், காயம் காரணமாக அந்த அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான விஜய் சங்கர் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் போது காயமடைந்த விஜய் சங்கர், மருத்துவ குழுவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மிட்செல் மார்ஸ் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் காயம் காரணமாக விலகியிருந்த நிலையில், தற்போது மிக முக்கியமான நேரத்தில் விஜய் சங்கரும் அணியில் இருந்து விலகியுள்ளது அந்த அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நாளை நடைபெறும் போட்டியில் விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.