என் முழு பங்களிப்பையும் இனி இங்கிலாந்து அணிக்கு மட்டுமே கொடுக்கப் போகிறேன், ஐபிஎல் தொடரில் பங்கேற்க போவதில்லை என சூசகமாக பேட்டியளித்துள்ளார் ஜோ ரூட்.
ஆஷஸ் தொடரில் பங்கேற்ற இங்கிலாந்து அணி 0-4 என்ற கணக்கில் படுதோல்வியடைந்து தொடரையும் இழந்தது. இதன் காரணமாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை புள்ளி பட்டியலில மிகவும் பின்தங்கி இருக்கிறது.
இங்கிலாந்து அணியை வழிநடத்திய ஜோ ரூட், இத்தகைய படுதோல்வியால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளார். தனிப்பட்ட பேட்டிங்கில் நன்றாக விளையாடினாலும், கேப்டனாக அணியை நன்றாக வழி நடத்தவில்லை. மேலும் பந்துவீச்சாளர்களை சரியான இடத்தில் பயன்படுத்தவில்லை என முதல் இரண்டு போட்டிகளில் மிகவும் விமர்சனத்திற்கு உள்ளானார். ஆனால் மூன்றாவது மற்றும் ஐந்தாவது போட்டிகளில் இதே தவறை மீண்டும் செய்து இங்கிலாந்து அணியை தோல்வியை நோக்கி வழிநடத்திச் சென்றிருக்கிறார். அதிர்ஷ்டவசமாக 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டிரா செய்தது. இதனால் ஒயிட்வாஷ் ஆகாமல் தப்பித்தது.
இருப்பினும் இத்தகைய படுதோல்விக்கு பொறுப்பேற்றுக் கொண்டு இங்கிலாந்து அணியை நான் தான் வழி நடத்துவதற்கு சரியான வீரர் என நம்பிக்கையுடன் பேட்டி அளித்திருக்கிறார் ஜோ ரூட். அவர் அளித்த பேட்டியில், “இங்கிலாந்து அணி தற்போது இக்கட்டான சூழலை சந்தித்து வருகிறது. இந்த தருணத்தில் ஒட்டுமொத்த அணி வீரர்களும் மோசமான மனநிலைக்கு செல்லாமல் மீண்டும் இங்கிலாந்து அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு வர தங்களது பங்களிப்பை கொடுக்க வேண்டும். நான்தான் அணியை வழிநடத்த சரியான வீரர் என நினைக்கிறேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இனி வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் இங்கிலாந்து அணி மற்றும் அதன் வெற்றிக்கு மட்டுமே முழு கவனமும் இருக்கும்.
இத்தகைய சூழலை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு மீண்டும் வீரர்களை ஒன்று திரட்டி, நிச்சயம் அணியை வெற்றிக்கு எடுத்துச் செல்கிற முயற்சிப்பேன். தோல்விகளால் நான் அணியை விட்டு சென்றால், நான் தகுதியானவன் இல்லை என நிரூபித்தது போல மாறி விடும். ஆகையால் இங்கிலாந்து அணியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு எடுத்துச் சென்ற பிறகே எனது பணி நிறைவடையும்.” என்றார்.
இனி முழு நேரமும் இங்கிலாந்து அணிக்காக மட்டுமே நேரத்தை செலவிட இருப்பதாக அவர் கூறியதை வைத்துப் பார்க்கையில், இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கவில்லை என தெளிவாக தெரிகிறது. ஆஷஸ் தொடருக்கு முன்னர் அவர் ஐபிஎல் தொடரின் ஏலத்தில் பங்கேற்கப்போவதாக தகவல்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.