இந்த வருட ஐபிஎல் தொடர் மும்பையில் நடைபெறுவதால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கூடுதல் பலம் கிடைக்கும் என்ற வாதமே தவறானது என மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றுள்ளது.
ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த தொடரில் இதுவரை மொத்தம் 14 சீசன்கள் நிறைவடைந்துள்ளன. இந்த வருடத்திற்கான தொடர் மார்ச் 26ம் தேதி துவங்கி மேத மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த தொடரின் ரன்னரான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.
கொரோனா பரவல் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராததால், இந்த வருட தொடரின் அனைத்து போட்டிகளில் மஹராஷ்டிராவின் மூன்று மைதானங்களில் வைத்து நடத்தப்பட உள்ளது. அனைத்து போட்டிகளிலும் மும்பையிலேயே நடைபெறுவது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும் என முன்னாள் வீரர்கள் சிலர் பேசி வரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவோ இதனை மறுத்துள்ளார்.

இது குறித்து ரோஹித் சர்மா பேசுகையில், “இந்த வருட ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் எடுக்கப்பட்டுள்ள பெரும்பாலான வீரர்கள், மும்பை ஆடுகளங்களில் பெரிதாக பரிட்சயம் இல்லாதவர்கள். நானும் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், பொலார்ட் மற்றும் பும்ராஹ் ஆகியோர் மட்டுமே மும்பை ஆடுகளில் அதிகமான போட்டிகளில் விளையாடியுள்ளோம், மற்றவர்கள் யாரும் அவ்வளவாக விளையாடவில்லை. நாங்களுமே கிட்டத்தட்ட 2 வருடங்களாக மும்பையில் ஒரு போட்டி கூட விளையாடவில்லை. மற்ற அணிகள் கூட கடந்த வருட தொடரில் மும்பை மைதானங்களில் விலையாடின, ஆனால் எங்களுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை, எனவே மும்பையில் நடைபெறுவதால் எங்களுக்கு கூடுதல் பலம் கிடைக்கும் என்ற வாதமே தவறானது” என்று தெரிவித்தார்.