மும்பை இந்தியன்ஸை கதறவிட்ட டூபிளசிஸ் – மேக்ஸ்வெல் கூட்டணி; கேதர் ஜாதவால் கடைசி நேரத்தில் தப்பித்த மும்பை; 200 ரன்கள் இலக்கு
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்துள்ளது.
16வது ஐபிஎல் தொடரின் 54வது லீக் போட்டியில் டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதி வருகின்றன.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூர் அணிக்கு விராட் கோலி (1) மற்றும் அனுஜ் ராவத் (6) ஆகியோர் ஏமாற்றம் கொடுத்தனர். இதன் பின் கூட்டணி சேர்ந்த மேக்ஸ்வெல் – டூ பிளசிஸ் ஜோடி மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை சிதறடித்து அசால்டாக ரன் குவித்தது.
மேக்ஸ்வெல் 33 பந்துகளில் 68 ரன்களும், டூபிளசிஸ் 41 பந்துகளில் 65 ரன்களும் எடுத்த போது விக்கெட்டை இழந்தனர். இதன்பின் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 18 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து கொடுத்தாலும், கடைசி நேரத்தில் களத்தில் இருந்த கேதர் ஜாதவ் 10 பந்துகளில் வெறும் 12 ரன்களும், ஹசரங்கா 8 பந்துகளில் வெறும் 12 ரன்களும் மட்டுமே எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்துள்ள பெங்களூர் அணி 199 ரன்கள் எடுத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக ஜேசன் பெஹண்ட்ரூஃப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.