இதுக்கு தான் இவ்வளவு பில்டப் கொடுத்தீங்களாடா…? 10 ஓவரில் போட்டியை முடித்த வெங்கடேஷ் ஐயர்; சாம்பியன் பட்டம் வென்றது கொல்கத்தா
17வது ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
17வது ஐபிஎல் தொடருக்கான சாம்பியனை தீர்மானிக்கும் இறுதி போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதாராபாத் இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, பேட்டிங்கில் கடுமையாக திணறி வெறும் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹைதராபாத் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவர் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட ரன் குவிக்கவில்லை.
பந்துவீச்சில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக ஆண்ட்ரியூ ரசல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஹர்சித் ரானா மற்றும் ஸ்டார்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதன்பின் 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கடந்த போட்டிகளை போலவே இந்த போட்டியிலும் பயம் இல்லாத அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
குர்பாஸ் 39 ரன்களும், அசால்டாக ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை சிதறடித்த வெங்கடேஷ் ஐயர் விக்கெட்டை இழக்காமல் 26 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 10.3 ஓவரிலேயே இலக்கை மிக மிக இலகுவாக எட்டிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3வது முறையாக சாம்பியன் பட்டத்தையும் தட்டி தூக்கியுள்ளது.