பெங்களூர் அணியின் 14 வருட கனவு இன்றாவது நிறைவேறுமா..? அசால்டாக 222 ரன்கள் குவித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்துள்ளது.
17வது ஐபிஎல் தொடரின் 36வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பெங்களூரு அணியும் பலப்பரீட்சை மேற்கொண்டு வருகின்றன.
கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்பின் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு சுனில் நரைன் 10 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மற்றொரு துவக்க வீரரான பிலிப் சால்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 14 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து கொடுத்தார்.
அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் ரகுவான்சி(3) தவிர, வெங்கடேஷ் ஐயர் (16), ஸ்ரேயஸ் ஐயர் (50), ரிங்கு சிங் (24), ஆண்ட்ரியூ ரசல் (27*) மற்றும் ரமன்தீப் சிங் (24) உள்ளிட்ட அனைத்து வீரர்களும் தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 222 ரன்கள் குவித்துள்ளது.
பந்துவீச்சில் பெங்களூர் அணி சார்பில் அதிகபட்சமாக யஸ் தயால் மற்றும் கேமிரான் க்ரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
17வருட ஐபிஎல் வரலாற்றில் பெங்களூர் அணி இதுவரை ஒரே ஒரு முறை மட்டும் தான் 200+ ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக கடந்துள்ளது, அதுவும் கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில். மற்ற அனைத்து போட்டிகளிலும் பெங்களூர் அணி தோல்வியையே சந்தித்துள்ளது கூடுதல் தகவல்.