பந்துவீச்சில் மும்பை இந்தியன்ஸை கதறவிட்ட ராஜஸ்தான் வீரர்கள்… மும்பையை கரை சேர்த்த திலக் வர்மா, வதோரா; ராஜஸ்தானிற்கு 180 ரன்கள் இலக்கு
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்துள்ளது.
17வது ஐபிஎல் தொடரின் 38வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதி வருகின்றன.
ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி துவக்கமே மிக மோசமாக அமைந்தது. ரோஹித் சர்மா (6), இஷான் கிஷன் (0), சூர்யகுமார் யாதவ் (10) ஆகியோர் வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தினர். அடுத்ததாக களத்திற்கு வந்த முகமது நபி 23 ரன்கள் எடுத்து கொடுத்தார்.
இதன்பின் கூட்டணி சேர்ந்த திலக் வர்மா – வதோரா ஜோடி மும்பை இந்தியன்ஸ் அணியை சரிவில் இருந்து மீட்கும் வகையில் பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது.
போட்டியின் 13வது ஓவர்கள் வரை விக்கெட்டை இழக்காமல் இருப்பதில் கவனம் செலுத்திய இந்த ஜோடி ஆமை வேகத்திலேயே ரன்னும் சேர்த்தது. இதன்பின் வேறு வழியின்றி அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்த இந்த கூட்டணி சீரான இடைவேளையில் பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் அடித்து ரன்னும் சேர்த்தது. வதோரா 24 பந்துகளில் 49 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார்.
நேஹல் வதோரா விக்கெட்டை இழந்தபிறகு களத்திற்கு வந்த ஹர்திக் பாண்டியா, டிம் டேவிட் உள்பட யாருமே சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரன் குவிக்காததாலும், கடைசி 4 ஓவர்களை மிக சிறப்பாக வீசிய ராஜஸ்தான்ன் வீரர்கள் கடைசி 4 ஓவர்களில் வெறும் 20 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்ததாலும் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 179 ரன்கள் எடுத்துள்ளது.
பந்துவீச்சில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகளையும், டிரண்ட் பவுல்ட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.