சாய் சுதர்சன், சுப்மன் கில் சதம்… கடைசி நேரத்தில் கட்டுப்படுத்திய சென்னை வீரர்கள்; சென்னை அணிக்கு 232 ரன்கள் இலக்கு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் துவங்கிய ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதி வருகின்றன.
குஜராத்தின் அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான ருத்துராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய சாய் சுதர்சன் – சுப்மன் கில் ஆகியோர், குஜராத் அணிக்கு அதிரடியான துவக்கத்தை அமைத்து கொடுத்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களின் பந்தை பாரபட்சம் பார்க்காமல் பிரித்து மேய்ந்த சாய் சுதர்சன் – சுப்மன் கில் ஜோடி அசுர வேகத்தில் ரன்னும் குவித்தது.
சென்னை அணியின் அனைத்து வியூகங்களையும் தவிடுபொடியாக்கி சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தின் மூலம் குஜராத் அணி 15 ஓவர்களுக்கே 200 ரன்களை கடந்தது.
சுப்மன் கில் 51 பந்துகளில் 7 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 103 ரன்களும், சுப்மன் கில் 55 பந்துகளில் 6 சிக்ஸர் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 104 ரன்களும் எடுத்திருந்த போது, துசார் தேஸ்பாண்டே வீசிய போட்டியின் 18வது ஓவரில் விக்கெட்டை இழந்தனர்.
இதன்பின் களமிறங்கிய டேவிட் மில்லர் 11 பந்துகளில் 16 ரன்களும், ஷாருக் கான் 2 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்துள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி 231 ரன்கள் எடுத்துள்ளது.
பந்துவீச்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் துசார் தேஸ்பாண்டே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஷர்துல் தாகூரை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் ரன்களை வாரி வழங்கினர்.