ஹர்சித் ராணா
கடைசி ஓவரில் மும்பை இந்தியன்ஸை கதறவிட்ட ஹர்சித் ராணா… மும்பையை வீழ்த்தி ப்ளே ஆஃப் சுற்றில் கால் பதித்தது கொல்கத்தா !!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது.

17வது ஐபிஎல் தொடரின் 60வது போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டி மழை காரணமாக தாமதமாக துவங்கியதால் போட்டியின் ஓவர் தலா 16ஆக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற  மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

கடைசி ஓவரில் மும்பை இந்தியன்ஸை கதறவிட்ட ஹர்சித் ராணா... மும்பையை வீழ்த்தி ப்ளே ஆஃப் சுற்றில் கால் பதித்தது கொல்கத்தா !! 1

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 16 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 42 ரன்களும், நிதிஷ் ராணா 33 ரன்களும் எடுத்தனர்.

இதன்பின் 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா 19 ரன்களில் விக்கெட்டை இழந்து இந்த போட்டியிலும் ஏமாற்றம் கொடுத்தார். மற்றொரு துவக்க வீரரான இஷான் கிஷன் 22 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

கடைசி ஓவரில் மும்பை இந்தியன்ஸை கதறவிட்ட ஹர்சித் ராணா... மும்பையை வீழ்த்தி ப்ளே ஆஃப் சுற்றில் கால் பதித்தது கொல்கத்தா !! 2

அடுத்தடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட் உள்ளிட்ட வீரர்கள் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து நடையை கட்டினர். வருண் சக்கரவர்த்தி மற்றும் ரசலின் சிறப்பான பந்துவீச்சால் மும்பை இந்தியன்ஸ் அணியின் மிக முக்கிய வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறினாலும், திலக் வர்மா மட்டும் கடந்த போட்டிகளை போலவே இந்த போட்டியிலும் தனி ஆளாக நீண்ட நேரம் போராடினார்.

போட்டியின் 15வது ஓவரில் களத்திற்கு வந்த நமன் ஓஜா ரசலின் பந்துவீச்சில் 2 சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்து போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தியதன் மூலம் கடைசி ஓவரில் 22 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வந்தது.

கடைசி ஓவரை வீசிய ஹர்சித் ராணா முதல் பந்திலேயே நமன் ஓஜாவின் விக்கெட்டையும், மூன்றாவது பந்தில் திலக் வர்மாவின் விக்கெட்டையும் கைப்பற்றி  மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றி கனவை தவிடுபொடியாக்கினார். இதன் மூலம் 16 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்த மும்பை இந்தியன்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியையும் சந்தித்தது.

கடைசி ஓவரில் மும்பை இந்தியன்ஸை கதறவிட்ட ஹர்சித் ராணா... மும்பையை வீழ்த்தி ப்ளே ஆஃப் சுற்றில் கால் பதித்தது கொல்கத்தா !! 3

பந்துவீச்சில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக ரசல், வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் நடப்பு தொடரில் தனது 9வது வெற்றியை பதிவு செய்த  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இதன் மூலம் 18 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *