சட்டம் எல்லாருக்கும் ஒன்னு தான்… அம்பயருடன் சண்டை போட்ட விராட் கோலி; சரியான தண்டனை கொடுத்த பிசிசிஐ
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின் போது அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விராட் கோலிக்கு பிசிசிஐ., அபராதம் விதித்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 36வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வழக்கம் போல் அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி 6 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 50 ரன்களும், பிலிப் சால்ட் 48 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய பெங்களூர் அணிக்கு அதிரடி துவக்கம் கொடுக்க நினைத்த விராட் கோலி 7 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரியுடன் 18 ரன்கள் எடுத்திருந்த போது ஹர்சித் ரானாவின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். விராட் கோலி விக்கெட்டை இழந்த குறிப்பிட்ட பந்து அவரது இடுப்பு பகுதிக்கு மேலே புல் டாஸாக வந்த போதிலும் அம்பயர் அதற்கு அவுட் கொடுத்ததால் ஆத்திரமடைந்த விராட் கோலி அம்பயருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அப்பீலும் செய்தார். மூன்றாவது நடுவரும் அவுட் கொடுத்ததால் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற விராட் கோலி, கடுப்ப்பில் கத்தி கொண்டே களத்தில் இருந்து வெளியேறினார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான இந்த போட்டியில் வெற்றிக்கு மிக அருகில் வந்த பெங்களூர் அணி, 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. பெங்களூர் அணியின் இந்த தோல்விக்கு விராட் கோலியின் விக்கெட்டும் ஒரு காரணமாக பார்க்கப்படும் நிலையில், அம்பயருடன் வாக்குவதத்தில் ஈடுபட்ட விராட் கோலிக்கு பிசிசிஐ., அபராதம் விதித்துள்ளது.
விராட் கோலி அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது போட்டி விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால் பிசிசிஐ., விராட் கோலிக்கு அவரது போட்டி சம்பளத்தில் இருந்து 50 சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளது.