பாலியல் புகார்; ராஜிவ் சுக்லாவின் நிர்வாக உதவியாளர் இடைநீக்கம்
உத்தரபிரதேச கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்க வீரரிடம் பணம் கேட்டதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லாவின் நிர்வாக உதவியாளரை இடைநீக்கம் செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
உத்தரபிரதேச கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்க வீரரிடம் பணம் கேட்டதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லாவின் நிர்வாக உதவியாளரை இடைநீக்கம் செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஐ.பி.எல். சேர்மனான ராஜீவ் சுக்லா உத்தரபிரதேச மாநில கிரிக்கெட் சங்கத்தின் இயக்குனராகவும் இருக்கிறார். இவரது நிர்வாக உதவியாளராக அக்ரம் சைபி என்பவர் இருந்தார். இவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அக்ரம் சைபி மீது உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் ராகுல் ஷர்மா திடுக்கிடும் புகார் தெரிவித்துள்ளார். ‘உத்தரபிரதேச மாநில கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்றால் பணம் மற்றும் இதர வகையில் தன்னை கவனிக்க வேண்டும் என்று அக்ரம் சைபி என்னிடம் தெரிவித்தார். மேலும் அவர் போலி வயது சான்றிதழ் அளித்து வருகிறார்’ என்றும் குற்றம் சாட்டி இருந்தார். அத்துடன் அக்ரம் சைபி, ராகுல் ஷர்மா ஆகியோர் இடையிலான உரையாடல் இந்தி சேனலில் ஒளிபரப்பானதால் சர்ச்சை கிளம்பியது.

இதைத் தொடர்ந்து ராஜீவ் சுக்லாவின் நிர்வாக உதவியாளர் அக்ரம் சைபியை இடைநீக்கம் செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த கமிஷனர் ஒருவரை நியமிக்கவும் இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. கமிஷனர் நியமிக்கப்பட்டதும் அவர் அக்ரம் சபியிடம் விசாரணை நடத்தி தனது அறிக்கையை 15 நாட்களுக்குள் சமர்ப்பிப்பார். அந்த அறிக்கையை ஆய்வு செய்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு இறுதி தீர்ப்பை வழங்கும்.