இனிமேல் இதை செய்தால் மட்டுமே ஐபிஎல் போட்டியை இணையத்தில் காண முடியும்!
ஐபிஎல் போட்டியை இணையம் வாயிலாக காண விரும்புபவர்கள் இனிமேல் இதை கட்டாயம் செய்ய வேண்டும் என அதன் ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ரசிகர்களுக்கு தெரிவித்திருக்கிறது.
உலகெங்கிலும் அச்சுறுத்தி வந்த கொரானா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. இதனால் இந்தியாவில் மட்டுமல்லாது உலகின் பல பகுதிகளிலும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் இருந்தது. இங்கிலாந்தில் ஜூலை மாதம் கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கியது. ஆனால் இந்தியாவில் நாளுக்கு நாள் கொரானா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதனால் தற்போது வரை எவ்வித கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறவில்லை.
ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலக கோப்பை தொடர் 2022 ஆம் ஆண்டிற்கு தள்ளிவைக்கப்பட்டது. இதனால் அந்த காலகட்டத்தில் ஐபிஎல் தொடரை நடத்திவிட பிசிசிஐ முடிவு செய்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டது. இந்தியாவில் அனுமதி கிடைக்காததால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தவிருக்கிறது.
செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை இந்த ஐபிஎல் தொடரானது நடைபெறவிருக்கிறது. ரசிகர்களுக்கு அனுமதி உண்டா? இல்லையா? என்பது தற்போது வரை தெரியவில்லை. 50 முதல் 70 சதவீதம் வரையிலான ரசிகர்களை அனுமதிக்குமாறு ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியம் அந்நாட்டு அரசிடம் கோரிக்கை விடுத்திருக்கிறது.
அனைத்து இந்திய ரசிகர்களும் தொலைக்காட்சி அல்லது இணையம் வாயிலாகவே காண இயலும் என தெரிகிறது. போட்டியை நேரலையாக ஒளிபரப்புவதற்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் உரிமம் பெற்றிருக்கிறது. இணையம் வாயிலாக நேரலையை பார்ப்பதற்கு ஹாட்ஸ்டார் செயலியை பயன்படுத்துமாறு அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
தொலைக்காட்சியில் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் சேனல் மூலம் காண இயலும். அதேபோல் இணையம் வாயிலாக காண்பதற்கு ஹாட்ஸ்டார் செயலியை பயன்படுத்தலாம். ஆனால் இதிலுள்ள சிக்கல் என்னவென்றால் ஹாட்ஸ்டார் செயலியின் மூலம் நேரலையை காண்பதற்கு சந்தாதாரர்கள் விஐபி சந்தாவை பெற்றிருக்க வேண்டும்.
இந்த குறிப்பிட்ட விஐபி சந்தாவை பெறுவதற்கு வருடத்திற்கு 1499 ரூபாய் செலுத்த வேண்டும் அல்லது ஐபிஎல் தொடர் நடைபெறும் காலத்தில் மட்டும் விஐபி சந்தா பெறவேண்டும் என்றால் மாதம் ஒன்றுக்கு 249 ரூபாய் வீதம் இரண்டு மாதத்திற்கு 498 ரூபாய் செலுத்த வேண்டும்.